காஷ்மீர் சிறுமி படுகொலைக்கு நீதி கேட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் !

காஷ்மீரில் 8 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை வழங்க வலியுறுத்தி சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி கோவில் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டு 3 நாட்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு பின்னர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். சிறுமியை 8 பேர் சேர்ந்து கொடூரமாகக் கொன்ற இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமிக் கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 2,500 பேர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று மத்திய அரசு இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். குற்றவாளிகள் 8 பேருக்கும் தூக்குதண்டனை வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Leave a Response