காவிரிக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கும் இயக்குநர் ராகேஷ்..!

முன்னெப்போதையும் விட கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் காவிரிக்கான போராட்டங்கள் தீவிரமடைந்து வருவது கண்கூடாகவே தெரிகிறது. காவிரி பிரச்சனை குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு வடிவத்தில் தங்களது உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தை இயக்கியுள்ள இயக்குநர் ராகேஷ்,
தற்போது காவிரி விழிப்புணர்வு குறித்த பாடல் ஒன்றை தயாரித்து இயக்கி வருகிறார்.
சுமார் 5 நிமிடம் கொண்ட இந்த பாடலை கவிஞர் வைரபாரதி எழுதியுள்ளார்.
‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ மற்றும் விரைவில் வெளிவர இருக்கும் ‘கோலிசோடா-2’ படங்களுக்கு இசையமைத்துள்ள அச்சு இந்தப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். ராகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
“நீண்ட நாட்களாகவே இப்படி ஒரு பாடலை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் இருந்து வந்தது.
அதற்கான நேரம் இப்போது வந்துள்ளதாக நினைக்கிறேன். காவிரி நீர் தமிழகத்திற்கு வரவேண்டும் என்கிற உணர்வில், டெல்டா மாவட்ட விவசாயிகளின் போராட்டங்கள், வலிகள், உணர்வுகள் மத்திய அரசை எட்டவேண்டும் எனும் விதமாக என்னுடைய தனிப்பட்ட முயற்சியாக இந்த பாடலை உருவாக்கியுள்ளேன்” என்கிறார் இயக்குநர் ராகேஷ்.
தற்போது இந்த பாடலுக்கான படப்பிடிப்பு தஞ்சை, திருச்சி காவிரி டெல்டா மாவட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. வரும் வாரத்தில் இந்த பாடலை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் இயக்குநர் ராகேஷ்.

Leave a Response