குமரியில் நான்கு நாட்களாக பரவலான மழை-மகிழ்ச்சியில் மக்கள்..!

மாலத்தீவு மற்றும் குமரி கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடந்த நான்கு நாள்களாக குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டிருப்பதால் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பருவ காலங்களிலும் மழை தவறாமல் பெய்து வந்தது. இதனால் கடும் கோடையில் கூட இந்த மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்காது என்பார்கள். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவ மழை, வடகிழக்கு பருவ மழை கூட சரியாக பெய்யவில்லை. இதனால் குடிநீருக்கும், விவசாய தேவைக்கும் அல்லாடும் நிலை ஏற்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக குமரி மாவட்டத்தில் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்டும் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே கடுமையான வெயில் அனலை கக்கி வந்தது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக குமரி மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்து கொண்டிருக்கிறது. மாலத்தீவு மற்றும் குமரி கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவது தான் இந்த மழைக்கு காரணம் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நேற்று காலையில் இருந்து மதியம் வரை வழக்கம்போல் நாகர்கோவிலில் வெயில் சுட்டெரித்தது. மதியம் 1.45 மணி அளவில் திடீரென வானம் கருமேகக்கூட்டங்களால் சூழப்பட்டு மப்பும், மந்தாரமுமாக காட்சி அளித்து.

அதனைத் தொடர்ந்து ஒருசில நிமிடங்களில் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சுமார் முக்கால் மணி நேரத்துக்கும் மேலாக கொட்டித் தீர்த்தது. அதன்பிறகும் சாரல் மழையாக பெய்தது.

இந்த மழையினால் நாகர்கோவில் கேப் ரோடு, செம்மாங்குடி ரோடு, மீனாட்சிபுரம் ரோடு, செட்டிகுளம் ரோடு, இந்துக்கல்லூரி ரோடு, பெண்கள் கிறிஸ்தவக்கல்லூரி ரோடு, வடசேரி ரோடு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திடீரென பெய்த மழையின் காரணமாக பலர் நனைந்தபடியே சென்றதையும், பலர் குடைகளை பிடித்துச் சென்றதையும் காண முடிந்தது. இதேபோல் குமரி மாவட்ட அணைப்பகுதிகள், மாவட்டத்தில் குளச்சல் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Response