கழுகு இயக்குனரின் வலி மிகுந்த கதை “சிவப்பு”!

Sivappu-movie-poster

நாயகன், பொல்லாதவன், தில்லு முல்லு, சிம்லா ஸ்பெஷல், சூரிய காந்தி, அந்தமான் காதலி, கதாநாயகன் உட்பட பல வெற்றிப் படங்களைத் தயாரித்த முக்தா பிலிம்ஸ் குழுமத்தின் கிளை நிறுவனமான முக்தா பிலிம்ஸ் என்டர்டெய்ன்மென்ட் பி. லிட்., பட நிறுவனம் சார்பாக முக்தா கோவிந்த், பிரியதர்சினி கோவிந்த் இணைந்து தயாரிக்கும் படம் ‘சிவப்பு’.

இந்த படத்தில் ராஜ்கிரண், நவீன் சந்திரா இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக ரூபா மஞ்சரி நடிக்கிறார். மற்றும் தம்பி ராமய்யா, செல்வா, போஸ் வெங்கட், ஏ. வெங்கடேஷ் , அல்வா வாசு, பூ ராம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – மது அம்பாட், இசை – என்.ஆர்.ரகுநந்தன், எடிட்டிங் – மு.காசி விஸ்வநாதன். கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்பேற்றிருப்பவர் சத்யசிவா. இவர் வெற்றி பெற்ற ‘கழுகு’ திரைப்படத்தை இயக்கியவர்.

படம் பற்றி இயக்குனர் சத்யசிவா கூறும்போது, ”சிவப்பு என்பது ஒரு கலராகத்தான் தெரியும். ஆனால், அதில் காதல், வறுமை, கோபம், கம்யூனிசம், வன்முறை என்ற கலரை மீறிய அம்சங்களும் உண்டு. இவை எல்லாவற்றையும் இணைத்துதான் கதையை உருவாக்கியுள்ளேன்.

இலங்கைப் போரில் சிதறுண்டு போன மக்கள் தப்பியோடி தாயகத்துக்கு வருகிறார்கள். அங்கே இழந்த சுதந்திரக் காற்றை சுவாசிக்க இங்கே வந்தால் இங்கும் மறுக்கப்படுகிற அவலம். அங்கே முள்வேலி முகாம்கள், இங்கே அகதிகள் முகாம்கள். தம் இனத்தை நாடி வந்த அவர்களுக்கு என்ன மாதிரியான வலி . துரத்தி அடிக்கப்பட்ட ஜீவன்களின் உள்ளுணர்வின் பிரதிபலிப்பே ‘சிவப்பு’ கதையின் அஸ்திவாரம்.

மன வலியுள்ள ஒரு கதையை சினிமாவாக்கியிருக்கிறோம். கட்டிடம் கட்டும் தொழிலாளர்களின் மறுபக்க வாழ்க்கையின் பதிவு என்றும் சொல்லலாம். நாம் வாழ்க்கையில் கேட்ட , பார்த்த பாத்திரங்களின் வாழ்க்கைதான் ‘சிவப்பு’.

‘கழுகு’ எப்படி பாராட்டப்பட்டு வெற்றி பெற்றதோ அதை விட இது பாராட்டுப் பெற்று வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார் இயக்குனர் சத்யசிவா.