பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிடத் தடை-டெல்லி உயர் நீதிமன்றம்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள், அடையாளங்கள், பெயர்களை ஊடகங்களில் வெளியிட டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி காஷ்மீரின் கத்துவா என்ற மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒரு கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த வித சரியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தச் செய்தி ஊடகங்களில் பரவி மிகப்பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இச்சம்பவம் குறித்து பல அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் மக்களும் தங்களின் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிறுமியின் பாலியல் வன்கொடுமை குறித்து ஆங்கில, இந்தி செய்தி தொலைக்காட்சிகள் அந்தச் சிறுமியின் புகைப்படம் பெயர், அடையாளம் ஆகியவற்றை வெளியிட்டு செய்தி வெளியிட்டன. இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், “சிறுமியின் பாலியல் வன்கொடுமை குறித்த செய்தியை ஊடகங்களில் பார்த்தோம். அது எங்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.

சிறுமியின் புகைப்படம், அடையாளம், பெயர் ஆகியவற்றை ஊடகங்களில் வெளியிடக் கூடாது எனக் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சட்டமான ‘போஸ்கோ’ சட்டத்தில் இருப்பது ஊடகத்தில் இருபவர்களுக்குத் தெரியாதா?. இது அவர்களை அவமதிக்கும் செயல். சிறுமியின் தனிப்பட்ட உரிமைகள் மீறப்படுவதை எந்தவிதத்திலும் அனுமதிக்க முடியாது.

சிறுமியின் புகைப்படங்களை வெளியிட்ட ஊடகங்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். இனிவரும் காலங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள், அடையாளங்கள், பெயர் உள்ளிட்ட எந்த விவரங்களையும் ஊடகங்களிலோ பத்திரிகைகளிலோ வெளியிடக் கூடாது” என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Response