காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டங்கள் தொடரும்-எம்.பி கனிமொழி

பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் கருப்பு சேலை அணிந்து கனிமொழி போராட்டத்தில் ஈடுபட்டார். சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே திமுக எம்பி கனிமொழி தலைமையில் நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் மு.க. தமிழரசு, அருள்நிதி உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி கூறியதாவது : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வீடுகளிலும், கடைகளிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கருப்புச் சட்டை அணிந்துகொண்டு தன்னுடைய நடைபயணத்தை தொடர்கிறார்.

தமிழகம் மக்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். பிரதமர் நம்முடைய உணர்வுகளை செவி கொடுத்து கேட்டதாகவே தெரியவில்லை. இப்போதாவது தமிழர்களின் கோபம் என்ன என்பதை பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டங்கள் தொடரும்.

காவிரி விவகாரம் பற்றி பேச அனுமதி கேட்ட போது அனுமதி தராத பிரதமருக்கு முதல்வரும், துணை முதல்வரும் காத்திருந்து பூங்கொத்து கொடுத்து வரவேற்கின்றனர். பிரதமருக்கு பச்சை சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கின்றனர்.

தமிழகத்தை வஞ்சிக்கும் பிரதமருக்கு சிவப்பு கம்பள வரவேற்பல்ல பச்சை கம்பளம் விரித்து வரவேற்கின்றனர். தமிழகத்தில் செயல்படும் அரசின் கோழைத்தனத்தை இது வெளிக்காட்டுகிறது.

காவல்துறையினர் போராட்டக்காரர்களை நடத்தும் விதத்தை ரஜினி ஆதரிக்கிறாரா என்பது தெரியவில்லை. ஒரு பக்கம் காவிரிக்காக குரல் கொடுப்போம் என அதிமுக உண்ணாவிரதம் இருக்கிறது, மற்றொரு புறம் தங்களின் உரிமைக்காக போராடுபவர்களை திமுக உள்ளிட்ட அமைப்பினரை கைது செய்வது ஒடுக்குவது என இரட்டை வேடம் போடுகிறது அரசு என்றும் கனிமொழி குற்றம்சாட்டினார்.

Leave a Response