ஏப். 20ல் சென்னையில் ஐபிஎல் நடத்த விட மாட்டோம்-சீமான் அதிரடி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல்முறையாக தமிழர்கள் தங்களின் உரிமைக்காக ஒற்றுமையாக ஒன்று திரண்டு போராடி வரும் நிலையில் அவர்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் ஐபிஎல் போட்டியை நடத்தக் கூடாது என்று அரசியல் கட்சி என்ற அடையாளத்தைத் தாண்டி தமிழர் கலை இலக்கிய பேரவை சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தின் போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து சீமான் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது : தமிழர்கள் அனைவரும் தங்களின் உரிமைக்காக கட்சி பாகுபாடின்றி ஒன்றுபட்டுள்ளனர். இதனால் எந்த கட்சிக் கொடியையும் ஏந்தாமல் தமிழகத்திற்கு என்று உள்ள கொடியை நாங்கள் கையில் ஏந்தினோம்.

தமிழகத்திற்கான பிரச்னை என்பதாலேயே மாநிலக் கொடியை ஏந்தி போராடினோம். மாநிலப் பிரச்னைகளுக்கு அதற்கான கொடியை ஏந்தி போராடுவதில் எந்தத் தவறும் இல்லை. கர்நாடகா தனக்கான தனிக்கொடியை அறிமுகம் செய்துள்ளது, அரசே அதிகாரப்பூர்வமாக இதை அறிவிக்கிறது. அதே அடிப்படையில் தான் மாநில உரிமைக்காக தமிழ்நாட்டின் கொடியை ஏந்தி போராடினோம். இதற்காக நாங்கள் தனி நாடு கேட்கிறோம் என்று அர்த்தமல்ல.

நேற்று கிரிக்கெட் பார்க்கப் போனவர்களின் நீருக்கும் சோறுக்கும் சேர்த்து தான் நாங்கள் போராடுகிறோம். வன்முறை பற்றி பேசும் ரஜினி களத்திற்கு வந்து போராட வேண்டும். நாளை பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்துவோம். ஏப்ரல் 20ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியை எதிர்த்தும் போராட்டம் நடத்துவோம். ஏப்ரல் 20ம் தேதி ஐபிஎல் போட்டி நடைபெறாது என்றும் சீமான் தெரிவித்தார்…

Leave a Response