என்னை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவிக்காத ரஜினி-பாரதிராஜா கேள்வி

ஐபிஎல்லுக்கு எதிரான போராட்டத்தின்போது என்னை கைது செய்ததற்கு கண்டனம் தெரிவிக்காத ரஜினி போலீஸார் மீதான தாக்குதலை மட்டும் கண்டிப்பது ஏன் என்று பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகமே போர்க்களமாகியுள்ளது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. எனினும் அதை மீறி நேற்று ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதை கண்டித்து அண்ணா சாலையில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது பேரிகாடை தாண்டி உள்ளே வர நினைத்த போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் வெற்றிமாறன், களஞ்சியம் உள்ளிட்டோருக்கும் தடியடி நடந்தது.

எதிர்வினையை மட்டுமே பூதாகரமாக பேசுவது சரியில்லை. போராட்டத்தில் என்னை கைது செய்தனர், அதை பற்றி ரஜினி கேட்கவில்லை. ஆனால் போலீஸார் மீதான தாக்குதலை மட்டும் கண்டிக்கிறார்.

அடுத்து 20-ஆம் தேதி நடைபெறும் ஐபில் போட்டிகளின் போது போராட்டம் நடத்துவோம் அது வேறு மாதிரியாக இருக்கும். ரஜினி வாய் மட்டுமே அசைக்கிறார். அவருக்கு வேறு யாரோ குரல் கொடுக்கின்றனர்.

தமிழர்கள் தாக்கப்பட்டபோது குரல் கொடுத்தாரா ரஜினி? இயக்குநர் வெற்றிமாறனை எதற்காக போலீஸ் தாக்கியது. நாளை தமிழகத்துக்கு வரும் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுவோம். விமான நிலையத்தை முற்றுகையிடுவோம் என்றார் பாரதிராஜா.

Leave a Response