ஜெயலலிதா இருந்தவரை துணைவேந்தர் நியமனம் தமிழகத்தின் விருப்பத்தை மீறி நடந்ததில்லை-அமைச்சர் ஜெயக்குமார்

துணைவேந்தர் நியமனத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை தமிழகத்தின் விருப்பத்தை மீறி நடக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கூறியதாவது:

அது அவர்களது சொந்தக் கருத்தாக இருக்கலாம், அரசின் கருத்தை நான் நேற்றே கூறிவிட்டேன். அனைத்து பல்கலைக்கழகத்துக்கும் தலைவர் வேந்தர் என்ற முறையில் ஆளுநர்தான். இது முழுக்க முழுக்க ஆளுநரின் அதிகாரத்திற்குட்பட்டது. ஆகவே அரசுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை தமிழக அரசின் எண்ணத்திற்கு மாற்றாக துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டதில்லை என்கிறார்களே?

உண்மைதான் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். அது மரபு, ஆனால் நடைமுறை அல்ல. ஆனால் ஆளுநர்தான் வேந்தர் அவர்தான் முடிவு செய்வார். அதற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை.

தகுதியான நபரை ஆளுநர் நியமிக்கும் போது தகுதியான நபர் தமிழகத்தில் இல்லையா?

அதுதான் நாங்கள் 3 பேரை கொடுத்துள்ளோம், ஆளுநர் தான் அதை தீர்மானிப்பார். இதில் எனது தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை.

ஸ்டாலின் நடைபயணம் பற்றி?

யார் வேண்டுமானாலும் நடைபயணம் போகலாம் குடகு மலையை அடகு வைத்தவர்கள் இவர்கள். இவர்கள் நடைபயணம் செல்ல எந்த நியாயமும் இல்லை. நடைபயணம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு யாரும் இடையூறு செய்ய வேண்டாம்.

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறதே?

ஐபிஎல் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டியது ரசிகர்கள்தான், ஏனென்றால் ரசிகர்கள்தான் எஜமானர்கள். கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டுமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க வேண்டியது ஐபிஎல் நிர்வாகம், இதில் தமிழக அரசின் பங்கு எதுவும் இல்லை. நாங்கள் பாதுகாப்பு மட்டுமே கொடுக்கிறோம்.. காவிரிகாக தமிழக ரசிகர்கள் வேண்டுமானால் ஐபிஎல் போட்டியை புறக்கணிக்கணிக்கலாம்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

Leave a Response