அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்-விஷால்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னெடுப்பில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஸ்ட்ரைக் நடைபெற்று வருகிறது. டிஜிட்டல் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ் திரையுலகினர் கடந்த ஒரு மாதமாக புதிய படங்களை வெளியிடவில்லை.

கடந்த 20 நாட்களாக படப்பிடிப்பு மற்றும் அதுதொடர்பான மற்ற வேலைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பல தயாரிப்பாளர்களுக்கும் கோடிக்கணக்கில் நஷ்டமும், ஆயிரக்கணக்கானோர் வேலையையும் இழந்துள்ளனர்.

ஸ்ட்ரைக் இழுத்துக்கொண்டே செல்வது எல்லோருக்குமே பாதிப்பு என்பதால் ஸ்ட்ரைக்கை முடிவுக்கு கொண்டு வர அரசின் உதவியை நாடியிருக்கிறது திரையுலகம். இதுதொடர்பாக சினிமா துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார்.

கடம்பூர் ராஜூவின் அறிவிப்புக்கு விஷால் தரப்பினர் நன்றி தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று கோட்டை நோக்கி பேரணி நடைபெறுவதாக இருந்தது. காவிரி, ஸ்டெர்லைட், நியூட்ரினோ தொடர்பான போராட்டங்கள் நடைபெற்று வருவதால் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை.

முதல்வரை சந்திக்க நேரம் கிடைக்காததால் நேற்று செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை, விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் சந்தித்துப் பேசினர். திரையுலகத்தில் நிலவி வரும் பிரச்னை குறித்து விரிவாக பேசியுள்ளனர்.

இந்தச் சந்திப்புக்கு பின்னர் பேசிய விஷால், ‘தயாரிப்பாளர் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள், டிஜிட்டல் ஒளிபரப்பு நிறுவனங்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு இரண்டு நாட்களில் ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்’ எனக் கூறியுள்ளார்.

Leave a Response