காவிரி மேலாண்மை ; ஏப்ரல் 2ல் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் ! ஓபிஎஸ்…

மதுரை பாண்டி கோவிலில் அதிமுக சார்பில் நடைபெற்ற  120  ஏழை  ஜோடிகள்  திருமண நிகழ்ச்சியில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திருமணத்தை முன்னின்று நடத்தி, மணமக்களை வாழ்த்தினர்.

திருமண நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர்  ஓ. பன்னீர்செல்வம், எங்கள் தலைமையிலான அரசு என்ன செய்யவிருக்கிறது என்று தமிழக மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள்  அம்மா வழியில் வந்தவர்கள்.  அதலால்  அவர்கள் வழியில் அவர்கள் தந்த நல்லாட்சியை எப்போதும் தொடர்ந்து தருவோம் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே சமயம், தமிழகத்தின் ஜீவாதாரத்துக்கு எந்த சிறு பிரச்னையும் வராமல், அம்மா வழியில், அடிபிறழாமல் நடப்பவர்களாக இருக்கும் நாங்கள், இந்த நல்ல நேரத்தில் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், தமிழகத்தின் உரிமை எந்த நேரத்திலும் பறிபோய் விடாத வகையில் எங்கள் குரல் என்றென்றைக்கும் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று கூறிக் கொள்கிறேன்.

அதற்கு அடையாளமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக சார்பாக வரும் ஏப்ரல் 2ம் தேதி தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரதப் போராட்ட என்ற வகையில் அறப்போர் நடைபெறும் என்பதை தெரிவிக்கின்றோம்.

உண்ணாவிரதப் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று, நமது உணர்வை வெளிப்படுத்தி, மத்திய அமைச்சகத்தில் இருப்பவர்கள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று போராட்டத்தில் பங்கேற்பவர்கள் வலியுறுத்தி பேச வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, சட்டத்துக்கு உட்பட்டு நடைபெறும் இந்த போராட்டத்தில், விவசாய பெருமக்களும், தமிழக மக்களும் பங்கேற்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

Leave a Response