“ரஜினியை” கேள்விகளால் விளாசிய கரு.பழனியப்பன்…

பக்

“அரசியலில் மக்கள்தான் ‘பெரியவர்கள்’ என்பதைத் புரிந்துகொண்டு அரசியலுங்கு வாங்க. பகுதிநேர அரசியல்வாதியாவராதீங்க. அரசியலுக்கு 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும்” என நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழ்த் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரு நீலம் என்ற யூடியூப் சேனலில் பேசியுள்ள இயக்குநர் கரு.பழனியப்பன் ரஜினியின் அரசியல் வருகை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்திருக்கிறார். ஒருசில கேள்விகள் அத்தனைக் காட்டமாக இருக்கின்றன.

இணையத்தில் வைரலாகிவரும் அந்த வீடியோவில் கரு.பழனியப்பன் பேசியிருப்பதாவது:

“என்னைப் போன்ற தீவிர ரஜினி ரசிகர்கள் எல்லாம், ரஜினிகாந்த் எப்போது வெளிப்படையாகப் பேசுவார் எனக் காத்திருந்த வேளையில் எனது அரசாங்கமும் எனது ஆட்சியும் எப்படி இருக்கும் என்பதை வாய் திறந்து கூறினீர்கள்.

எம்ஜிஆர் ரசிகர் – ரஜினி ரசிகர்: வித்தியாசம் தெரியுமா?

இந்த இடத்தில், ரஜினி ரசிகனுக்கும் எம்ஜிஆர் ரசிகனுக்குமான வேறுபாட்டை உண்ர்த்துவது மிகவும் முக்கியமானது என நான் நினைக்கிறேன். ஏனெனில், திரையுலகில் மிகப்பெருவாரியான ரசிகர்களைக் கொண்டிருந்தவர்கள் எம்ஜிஆரும் நீங்களும். எம்ஜிஆர் திரையில் பார்த்தவர்கள். அவர் போதித்த நல்லொழுக்கங்களை நன்மைகளைப் பார்த்து, அவரை ஒரு நல்லவராகப் பார்த்து ரசிகர் ஆனவர்கள்.

ஆனால், உங்களைப் பார்த்து ரசிகனானவர்கள் வேறு. அவர்கள், உங்களை தன்னைப் போல் ஒருத்தன் என நினைத்தவர்கள். ரஜினிகாந்த் சிகரெட் புகைப்பார், தண்ணி அடிப்பார், பிற பெண்களுடன் தொடர்பு இருக்கும். ஆனாலும் நல்லவர் என்றே நாங்கள் அறிந்திருந்தோம். அப்படித்தான் உங்கள் ரசிகரானோம்.

ஆனால், அரசியலுக்கு வரும்போது ரஜினி முகத்தைக் கழற்றிவிட்டு எம்ஜிஆர் முகத்தை ஏன் போட்டுக்கொள்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. அப்போது என்னைப் போன்ற ரஜினி ரசிகனுக்கு பதற்றம் வருகிறது. ஏன் ரஜினியாக வராமல் எம்ஜிஆராக வருகிறார் என்ற கேள்வி எழுகிறது.

தலைவன் என்றால் யார் தெரியுமா?

அதுமட்டுமல்லாமல் அரசியல் வெற்றிடத்தை நிரப்புவேன் என்கிறீர்கள். ஒரு சிறந்த தலைவன் தனக்கான இடத்தை உருவாக்குவான். எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தபோது எவ்வித வெற்றிடமும் இல்லை. எல்லா இடத்திலும் ஆள் இருந்தார்கள். ஆனால், அவர் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கினார்.

ஒரு வெற்றிடத்தை நிரப்பத்தான் வருவேன் என நீங்கள் கூறினீர்கள் என்றால் உங்களுக்குப் பெயர் சப்ஸ்டிட்யூட் ப்ளேயர். அப்படி இருந்தால் ஒரிஜினல் ப்ளேயர் வந்தவுடன் சப்ஸ்டிட்யூட் ப்ளேயரை வெளியே அனுப்பிவிடுவார்கள். எங்களுக்கு நிரந்தர ஆட்டக்காரர்தான் வேண்டும்.

‘ஆன்மிக அரசியல் விளக்கம்.. அடடே’

உங்கள் அரசியல் ஆன்மிக அரசியல் என்ற விளக்கம் கொடுக்கிறீர்கள். அது என்னவென்றால், சாதியற்ற, மதமற்ற, வெளிப்படையாக, மிக நேர்மையான அரசியல் என்கிறீர்கள். அருகில் ஏ.சி.சண்முகத்தை அமர வைத்துக்கொண்டு சாதியற்ற அரசியல் என்று நீங்கள் பேசுவதே எனக்கு சிரிப்பை வரவழைக்கிறது.

இருக்கிற சாதிக் கட்சியை எல்லாம் ஒன்று சேர்த்து நீதிக் கட்சி என்ற பெயரில் அரசியலுக்கு வந்தவர் அவர். அவரை வைத்துக்கொண்டு அவர் செலவிலேயே எப்படி சாதியற்ற அரசியல் செய்வேன் எனக் கூறுகிறீர்கள் என்பது புரியவில்லை.

உங்களிடமும் இருந்து பலனடைய வேண்டும் என்ற ஏ.சி.சண்முகம் போன்றவர்களை வைத்துக் கொண்டு சாதியற்ற அரசியல் செய்வது சாத்தியமா என்பது எனது கேள்வி.

குளியல்.. துண்டு; அரசியல்.. கொள்கை:

நான் கட்சியை ஆரம்பிக்கும் முன்னரே ஒரு சிறு பையன் என்னிடம் எப்ப கட்சி ஆரம்பிப்பீர்கள் என்று கேட்கிறார். உங்களுக்கு இப்போது 68 வயசு. உங்கள் வயசுக்கு எல்லாருமே தமிழ்நாட்டில் சின்னப்பையன்கள் தான். கருணாநிதி மட்டுமே மூத்தவர். அவர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலிருக்கிறார். கட்சியை ஆரம்பிக்கும் முன்னரே கொள்கை என்னவென்று கேட்கிறார்கள் என்கிறீர்கள். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் குளிக்கச் செல்லும் முன்னர்தானே துண்டை எடுத்துச் சென்றீர்கள். குளித்த பின்னர் தானே தேவைப்படும் என்று அப்புறம் வந்தா துண்டை எடுத்தீர்கள். கட்சி ஆரம்பிக்கும் முன்னரே கொள்கை வேண்டும்.

அன்று எதிர்ப்பு, இன்று ஆதரவா?

எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தபோது எனது கொள்கை அண்ணாயிஸம் என்று கூறினார். அதை துக்ளக் ஆசிரியர் சோ தொடர்ந்து விமர்சித்துக் கொண்டே இருந்தார். ஆனால், நீங்கள் கூறிய ஆன்மிக அரசியலை இப்போதைய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி வரவேற்கிறார். யாரைத் தேர் ஏற்ற நீங்கள் தெருவுக்கு வந்திருக்கிறீர்கள்? இதை எங்களுக்குத் தெளிவுபடுத்துங்கள்.

எம்ஜிஆர் ஆட்சி என்றால் எத்தகையது?!

எம்ஜிஆர் போல் நல்லாட்சித் தருவேன் என்கிறீர்கள். எம்ஜிஆர் ஆட்சியின்போது நீங்கள் சினிமாவில் மிகவும் பரபரப்பாக இருந்தீர்கள். அதனால், எம்ஜிஆர் ஆட்சி எப்படி இருந்திருக்கும் என்று உங்களுக்கு தெரிந்திருக்காது.

எம்ஜிஆர், மதுக்கடைகளைத் திறக்க மாட்டேன் என தனது தாய் மீது சத்தியம் பண்ணி ஆட்சிக்கு வந்தவர். ஆனால், அதன் பின்னர் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் சாராயத்தை உற்பத்தி செய்ய தனியார் தொழிலதிபர்களுக்கு அனுமதி கொடுத்தார். டாஸ்மாக் அவர் காலத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டது. 1984-ல் தொடங்கப்பட்டது. இன்றும் டாஸ்மாக் மூலம் வருமானம் கொட்டுகிறது. 30,000 ஊழியர்கள் 5800 கடைகள் உள்ளன. அப்படி என்றால், நீங்கள் எந்த எம்ஜிஆர் ஆட்சியைச் சொல்கிறீர்கள் எனத் தெரியவில்லை.

அதேபோல், எம்ஜிஆர் இடஒதுக்கீட்டில் புதிய திருத்தம் கொண்டுவந்தார். 31% இடஒதுக்கீடு இருந்த நேரத்தில், ஆண்டு வருமானம் ரூ.9000-க் கீழ் இருந்தால்தான் சலுகையைப் பெறலாம் என பொருளாதார இடஒதுக்கீடு கொண்டுவந்தார். அதற்கு எதிராகப் போராட்டமும் பிரச்சினைகளும் உருவாகின. அடுத்துவந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தார். பயந்துபோய் இடஒதுக்கீட்டை 50% ஆக உயர்த்தினார். சமூக நீதியின் அவசியத்தைப் புரிந்துகொண்டார். நீங்க பாஜக நண்பர்கள் அதிகம் வைத்திருப்பதால் எந்த இடஒதுக்கீட்டைச் சொல்ல வருகிறீர்கள். அதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக, இலங்கையில் 84-ல் இனக் கலவரம் வெடித்தபோது தமிழர்கள் மீது எம்ஜிஆர் பரிவான பார்வை வைத்திருந்தார். குறிப்பாக பிரபாகரனை ஆதரித்தார். ரூ.2 கோடி பணம் கொடுத்ததாக ஆண்டன் பாலசிங்கம் ஒரு புத்தகத்தில் கூறினார். இது வரலாறு. இதை யாரிடமும் கேட்கத் தேவையில்லை. எம்ஜிஆர் ஆட்சி செய்வேன் என்றால், இலங்கைத் தமிழரிடம் உங்கள் அணுகுமுறை எப்படி இருக்கும்?

எம்ஜிஆர் போல் எளிய மக்களுக்குக் குரல் கொடுப்பேன் எனக் கூறுகிறீர்கள். எம்ஜிஆர் எளிய மக்களோடு என்னவாக இருந்தார் என்ற சாட்சியம் இருக்கு. ஆனால், நீங்களோ ராஜ்குமார் கடத்தப்பட்டபோது குரல் கொடுத்தீர்கள், அமிதாபுக்கு உடல்நிலை சரியில்லாதபோது குரல் கொடுத்தீர்கள். சென்னையில் வெள்ளம் வந்தபோது குரல் கொடுத்தீர்களா? ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது வந்தீர்களா?

முதலில் எம்ஜிஆர் குணங்களைப் பின்பற்றுங்கள்:

அதுமட்டுமல்ல எம்ஜிஆர் சொன்னால் நினைவுக்கு வருவது, அவருடன் இரண்டு குழந்தைகள் உட்கார்ந்து சாப்பிடும் பட்ம். எம்ஜிஆர், யார் போனாலும் சாப்பாடு போடுவார் என்பது எல்லோருக்கும் தெரியும். உங்கள் மகள் திருமணத்துக்காக ரசிகர்கள் அனைவருக்கும் சாப்பாடு போடுவேன் எனக் கூறினீர்கள். உங்களுக்கு எல்லாம் கிடா விருந்து வைக்க வேண்டும், ஆனால் மண்டபத்தில் அசைவ விருந்து போடமுடியாது என்றீர்கள். முதலில் எம்ஜிஆர் பழக்கவழக்கங்களை குணங்களை உங்கள் வீட்டிலும் கல்யாண மண்டபத்திலும் பின்பற்றுங்கள். அதன்பின்னர் அரசியலுக்கு வாருங்கள். அதுவரை நாடு காத்திருக்கும்.

கோர்ட்டுக்குப் போகாமல் ஏன் கோட்டைக்குப் போனீர்கள்?

திருமண மண்டபம் கட்ட எம்ஜிஆர் உதவினார் எனக் கூறினீர்கள். 30 ஆண்டுகள் கழித்து அதை ஏன் இப்போது கூறினீர்கள் எனத் தெரியவில்லை. கோர்ட்டுக்குப் போக வேண்டிய நீங்கள் ஏன் கோட்டைக்குப் போனீர்கள்? உங்களிடம் எல்லா அனுமதியும் முறையே இருந்திருந்தால் நீதிமன்றத்தைத்தானே அணுகியிருக்க வேண்டும். நண்பர் சொன்னதற்காக கோட்டைக்குப் போன நீங்கள் எப்படி சிஸ்டத்தை சரிசெய்ய முடியும்? தனக்குத் தேவை என்றால் கோட்டைக்குப் போவேன் என்பவர் சிஸ்டத்தைப் பற்றி பேசவே கூடாது.

தெளிவாகப் பேசுங்கள்:

எம்ஜிஆர், ஜெ., கருணாநிதி மிகச் சிறந்தவர்கள் என்கிறீர்கள். அவர்கள் ஆட்சிதான் 50 ஆண்டுகளாக நடந்திருக்கிறது அப்படியென்றால் சிஸ்டம் எப்படி கெட்டது? பக்தவத்சலம் சரியில்லையா? காமராஜர் சரியில்லையா? யாரைச் சரியில்லை என்று சொல்ல வருகிறீர்கள்.

மாணவர்கள் ஆங்கிலம் படியுங்கள் என்கிறீர்கள். அப்படிப் படித்தால் நீங்கள் வாழ்க்கையில் முன்னேறுங்கள். தமிழர்கள் முன்னேறினால் தமிழ் முன்னேறும் என்று நீங்கள் கூறியது அரிய கருத்து. நீங்கள் முன்னேறினீர்களே, கன்னடம் உங்களால் முன்னேறியதா? ஓர் இனக்குழு முன்னேறுவதால் மொழி முன்னேறாது. பார்ஸி இனக்குழுதான் அதிகம் தொழில் ரீதியாக முன்னேறியுள்ளது. அதற்காக பார்ஸி மொழி வாழ்ந்துவிட்டதா? தமிழர்கள் தமிழ் பேசுவதால் தமிழ் முன்னேறுகிறது. நீங்கள் வீட்டில் கன்னடம் பேசினால் கன்னடம் வளரும். இன்று ஆங்கிலம் படிக்கச் சொல்வீர்கள், அப்புறம் பாஜக சொல்வதுபோல் இந்தி, சமஸ்கிருதம் படிக்கச் சொல்வீர்கள். தமிழை வளர்க்க வேண்டிய அவசியம் எங்களிடம் இருக்கிறது.

அரசியலில் மக்கள்தான் ‘பெரியவா’

அரசியல் என்பது பால பெரியவா, பெரியவா, மகா பெரியவா என்பதற்கான இடமல்ல. அரசியலில் மக்கள்தான் ‘பெரியவா’ என்பதைத் புரிந்துகொண்டு அரசியலுங்கு வாங்க. நீங்கள் பகுதிநேர அரசியல்வாதியா அரசியலுக்கு வராதீங்க. அரசியலுக்கு 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும்.

இறுதியாக ஒரு திருக்குறளைச் சொல்கிறேன்.

பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்

மக்கட் பதடி யெனல்.

( இதன் விளக்கம்: பயனில்லாத சொற்களைப் பலமுறையும் சொல்லுகின்ற ஒருவனை மனிதன் என்று சொல்லக்கூடாது, மக்களுள் பதர் என்று சொல்லவேண்டும். )

இதைப் படியுங்கள் இன்னும் நிறைய திருக்குறள் படிப்பீர்கள்”

இவ்வாறு கரு.பழனியப்பன் பேசியுள்ளார்.

Leave a Response