தேனீக்கள் கொட்டியதில் 2 பேர் இறந்தனர்.. 4 பேருக்கு தீவிர சிகிச்சை…

2927

பவானி அருகே கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தபோது ராட்சத தேனீக்கள் கொட்டியதில் 2 பேர் இறந்தனர். 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பையில், பவானி ஆற்றங்கரையோரம் கோமுனியப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலை புதுப்பிப்பது தொடர்பாக கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் கோயில் வளாகத்தில் நேற்று மாலை நடந்தது.
கூட்டம் முடிந்ததும் சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து பொங்கல் வைத்தனர். அப்பகுதியில் ஏராளமான மரங்கள் உள்ளன. இதில் 5 இடங்களில் ராட்சத மலைத்தேனீக்கள் கூடு கட்டி உள்ளன. ஒவ்வொரு தேன்கூடும் 10 கிலோவுக்கு அதிகான எடை கொண்டது.

பொங்கல் வைத்தபோது எழுந்த புகைமூட்டம் காரணமாக தேனீக்கள் கலைந்து பறக்க துவங்கின. அங்கு நின்றவர்களை தேனீக்கள் விரட்டி விரட்டி கடித்தன. இதை கண்டு பக்தர்கள் ஓட்டம் பிடித்தனர். ஜம்பையை சேர்ந்த மயில்சாமி(60), பொன்னுசாமி(70), சின்னம்மாள்(70), கணேசன்(47), நடராஜ்(60), ராமசாமி(70) ஆகியோர் உடலில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் கடிபட்டு வலியால் துடித்தனர். பவானி தீயணைப்பு குழுவினர் வந்து அவரகளை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மயில்சாமியும், பொன்னுசாமியும் பரிதாபமாக இறந்தனர். மற்ற 4 பேரும் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பவானி போலீசார் இதுபற்றி விசாரித்தனர். 5 தேனீக்கள் கடித்தாலே உயிர் பறிபோகும் அளவுக்கு விஷம் கொண்டவை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Response