நீட் தேர்வு கண்டன ஆர்ப்பாட்டம்! அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு : வைகோ

maxresdefault

தமிழகத்தில் சமூக நீதிக்காகப் போராடும் அனைத்துக் கட்சிகள் – சமுதாய இயக்கங்கள் ஆகியவற்றின் வற்புறுத்தலால் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக அரசு இரண்டு மசோதாக்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. அதனைத் தொடர்ந்து மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்து அதனை நிறைவேற்றவோ, இதற்காக நாடாளுமன்றத்தில் தங்கள் உறுப்பினர்களை குரல் கொடுக்கச் செய்யவோ ஆளும் அதிமுக எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை.
இந்நிலையில் நடுவண் அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்த ஆண்டு நடைபெற உள்ள நுழைவுத் தேர்வில் மாநில கல்வித் திட்ட அடிப்படையில் வினாத் தாள்கள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால், மூன்று நாட்களுக்குப் பிறகு அதனை மறுத்து மத்திய சி.பி.எஸ்.சி. கல்வித் திட்ட அடிப்படையில் வினாத் தாள் அமைக்கப்படும் என்று நடுவண் அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே மாநிலப் பட்டியலில் உள்ள கல்வித்துறையை மத்திய அரசு கபளீகரம் செய்துவிட்ட நிலையில், தேசிய மருத்துவ ஆணையம் ஒன்றைக் கொண்டுவந்து மேலும் மாநில அரசுகளை அவமதிக்கும் செயலில் பா.ஜ.க. அரசு ஈடுபட்டுள்ளது.

எதிர்வருகிற மே 6 அன்று நீட் தேர்வு நடைபெறுவதாக நாள் குறிக்கப்பட்டுவிட்டது. இந்தச் சூழலில் சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் கூட்டிய மறுமலர்ச்சி தி.மு.க., உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 05.02.2018 அன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மறுமலர்ச்சி தி.மு.க., முழுமையான ஆதரவை அளிக்கிறது. கழகத் தோழர்கள், நிர்வாகிகள், குறிப்பாக மாணவர் அணி, மறுமலர்ச்சி மாணவர் மன்ற தோழர்கள் பெருமளவில் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Response