செல்பிக்கு- ஆசைப்பட்டு உயிரை விட்ட மாணவர்

coimbature accident

கோயம்புத்தூர் மாவட்டம், கணபதி மணியகாரன்பாளையத்தைச் சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் சுஜிஸ் (18). இவர் கோயம்புத்தூர், நீலாம்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

செல்போனில் வித்தியாசமாக ‘செல்பி’ எடுத்து முகநூலில் பதிவு செய்வது சுஜிஸின் வழக்கம். கல்லூரியில் தேர்வு முடிந்து சுஜிஸ் மற்றும் அவரது நண்பர்கள் உள்பட நால்வர் மோட்டார் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கோயம்புத்தூரை அடுத்த முத்துகௌண்டன் புதூர் பகுதியில் வந்தபோது தூரத்தில் ஒரு சரக்கு இரயில் வந்து கொண்டிருந்தது.

இதனைப் பார்த்த சுஜிசும் அவரது நண்பர்களும் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு இரயில் தண்டவாளம் அருகில் சென்றனர். சரக்கு இரயில் அருகில் வந்ததும் சுஜிசின் நண்பர்கள் நகர்ந்து விட்டனர். ஆனால், சுஜிஸ் மட்டும் தண்டவாளம் அருகில் நின்று ஓடும் இரயிலை ‘செல்பி’ எடுத்தார்.

சரக்கு ரெயில் என்ஜின் அவரை கடந்து சென்றுவிட்டது. ஆனால், அதனுடன் இணைக்கப்பட்ட பெட்டி என்ஜினை விட சற்று அகலமாக இருந்ததால் அது அவரது தலையில் மோதியது. இதில் அவர் தூக்கி விசப்பட்டு பலத்த காயத்தோடு இரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார்.

இதனைப் பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து சுஜிஸை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுஜிஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

முகநூலில் லைக் வாங்க ஓடும் இரயில் அருகில் நின்று ‘செல்பி’ எடுக்கும் விபரீத ஆசையால் மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response