கட்சிக்குள் மாற்றம்: தி.மு.க., தலைமை திடீர் முடிவு

02stalin1

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட இருக்கும் சூழலில், கட்சியின் நிர்வாக அமைப்புகளில் இருக்கும் சில குறைபாடுகளை விரைந்து சரி செய்ய வேண்டும் என, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினுக்கு, கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் ஆலோசனை கூறி உள்ளனர். மாற்றம்: ஓராண்டுக்கு முன், கட்சியின் நிர்வாகப் பொறுப்பிற்கு தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர். அதன் பின் வந்த தேர்தல்களில் தி.மு.க., எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பல மாவட்டங்களுக்கும் செயலர் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், சில மாவட்டங்களில் நிலவிய குழப்பங்களால், மாவட்ட செயலர் தேர்வு நடத்தப்படாமல், பொறுப்பாளர்கள் மட்டும் நியமிக்கப்பட்டனர். அப்படிப்பட்டஇடங்களில், கட்சி நிர்வாக கட்டமைப்பு முழுமையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதை அடுத்து, அந்தந்த மாவட்டங்களுக்கு செயலர் பொறுப்பில் நிர்வாகிகளை நியமிக்க, கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.குறிப்பாக, சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா நியமிக்கப்பட்டார்.
அருகில் இருக்கும் மத்திய மாவட்ட செயலர் ராஜேந்திரனுடன் இருக்கும் கோஷ்டி பிரச்னையை அடுத்து, வீரபாண்டி ராஜா, சட்டசபை தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். கட்சியினர் மத்தியில் அவருக்கு செல்வாக்கு இருப்பதால், உள்ளாட்சித் தேர்தலை கணக்கிட்டு, அவரை, சேலம் கிழக்கு மாவட்ட செயலராக நியமிக்க, கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளது. அதே போல, தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களிலும் நிர்வாகப் பொறுப்பில், தொண்டர்களிடம் பிடிப்புள்ள நபர்களை நியமிக்க கட்சித் தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Response