ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து ; உண்மை நிலை என்ன?

haggg

சவூதி அரேபியா நாட்டின் மெக்கா நகருக்குத் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்பது இஸ்லாமியர்களின் புனிதக் கடமை என்று கருதப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மெக்கா நகருக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது மத அடிப்படையில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான இஸ்லாமியப் பெருமக்கள் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதை வாழ்நாள் கடமையாகச் செய்து வருகின்றனர்.

இஸ்லாமியர்களின் புனித ஹஜ் யாத்திரைக்காக மத்திய அரசு வழங்கி வரும் மானியத் தொகை இந்த ஆண்டு முதல் நிறுத்தப்படுவதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி அறிவித்துள்ளார். 2012-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபடி, அரசு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் ‘ஹாஜிக்களுக்கு’ மத்திய அரசு எவ்வித மானியமும் அளிப்பது இல்லை என்பதுதான் உண்மை ஆகும். முஸ்லிம்களின் ஹஜ் பயணத்தில் இந்திய அரசு கோடிக்கணக்கில் செலவிடுவதாகக் கூறப்படுவதிலும் துளி கூட உண்மை இல்லை. மானியம் என்பது ஹஜ் பயணிகளுக்கு அல்ல. இந்திய அரசின் விமான நிறுவனத்துக்குத்தான் என்பதை மறுக்க முடியாது. ஹஜ் யாத்திரை செல்பவர்களை அரசின் ஹஜ் குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கிறார்கள். அவ்வாறு தேர்வு செய்யப்படும் ஹஜ் பயணிகள் அதற்கான கட்டணமாக ரூ. 1 இலட்சத்து 80 ஆயிரம் செலுத்த வேண்டும். சவூதியில் இறங்கியது முதல் திரும்பும்வரை ஏற்படும் உணவு உள்ளிட்ட செலவுகளுக்காக ரூ. 34 ஆயிரம் ஹாஜிகளிடம் ஜித்தாவில் இறங்கியவுடன் வழங்கப்படும். இதைக் கழித்தால் ஹாஜிகள் செலுத்தும் தொகை ரூ. 1 இலட்சத்து 46 ஆயிரம் ஆகும். இதில் விமானக் கட்டணம், மக்கா, மதினாவில் தங்கும் கட்டணம், ஹஜ் வழிகாட்டி கட்டணம் உள்ளிட்டவை சேர்த்து ஹஜ் குழு மூலம் செலவிடப்படும் தொகை ரூ. 1 இலட்சத்து 20 ஆயிரம் மட்டுமே. ஆனால் ஒவ்வொரு ஹஜ் பயணியும் மத்திய அரசுக்கு 25 ஆயிரம் ரூபாய் அதிகமாகச் செலுத்துகிறார்கள். இதில் எங்கிருந்து மானியம் கிடைக்கிறது என்று தெரியவில்லை.

ஆனால், பா.ஜ.க. அரசு ஹஜ் புனித யாத்திரைக்கு மத்திய அரசு ஆண்டுக்கு சராசரியாக ரூ. 650 கோடி முதல் ரூ. 700 கோடி வரை ஒதுக்குவதாகவும் அது இந்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படுவதாகவும் கூறி இருக்கிறது. அப்சல் அமானுல்லா தலைமையிலான ஹஜ் யாத்திரைக்கான குழு, மானியங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கடந்த அக்டோபரில் பரிந்துரை செய்து இருக்கிறது. விமானக் கட்டணத்தைவிட கப்பல் பயணச் செலவு குறைவு என்பதால், கடல் மார்க்கமாக ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் ஹஜ் யாத்திரைக்குப் புதிய கொள்கையை அக்குழு தனது பரிந்துரையில் அறித்துள்ளது.
பா.ஜ.க. அரசு சிறுபான்மையினர் நலனுக்கு எதிராக செயல்படுகிறது என்பதையும்; மதச் சகிப்பின்மையால் கடந்த மூன்றாண்டுகளாக சங் பரிவார், இந்துத்துவா கூட்டம் நடத்துகின்ற வன்முறை ஆட்டங்களையும் நாடு சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது.

ஹஜ் புனித யாத்திரைக்காக மத்திய அரசு ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்குத்தான் மானியம் அளித்து வருகிறது. எனவே, இஸ்லாமியர்களின் ஹஜ் புனித யாத்திரைக்கு ‘மானியம்’ என்பதை மத்திய அரசு கூறாமல் இருப்பதுதான் ஹாஜிகளுக்குப் பெருமை அளிக்கக் கூடியதாக இருக்கும்.

ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் பயணிகள், இந்திய அரசின் ‘ஏர் இந்தியா’ விமானம் மூலம் மட்டுமே சவூதிக்குச் செல்ல வேண்டும் என்ற கட்டாய நிபந்தனையையும் தளர்த்தினால் ஹாஜிகள் தங்கள் விருப்பப்படி மெக்கா புனிதப் பயணம் செல்லும் நிலை ஏற்படும் என்று வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Response