சூரிய கடவுளுக்கு நன்றி சொல்வோம் பொங்கலை கொண்டடுவோம் தை மாத சிறப்புகள்.

NTLRG_160115133443000000

நம் நாட்டில் பொதுவாக எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது என்பது பழங்காலத்தில் இருந்து வரும் பழக்கம் ஆகும். இம்மாதத்தில் தான் சூரியன் வடஅரைக் கோளப் பகுதியில் பயணத்தை ஆரம்பிக்கும் உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது. அறுவடையால் மகிழ்ச்சி மிகுந்த மக்கள் தங்கள் கடவுள்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மக்கள் தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், திருவள்ளுவர் தினம், தைப் பூசம், தை அமாவாசை, ரத சப்தமி போன்ற விழாக்களையும், சபலா ஏகாதசி, புத்ரதா ஏகாதசி, பைரவ வழிபாடு, வீரபத்திரர் வழிபாடு, சாவித்ரி கௌரி விரதம் போன்ற வழிபாட்டு முறைகளையும் இம்மாதத்தில் பின்பற்றுகின்றனர்.

போகிப் பண்டிகை

இந்தநாள் பழையன கழித்து, புதியன புகவிடும் நாளாகக் கருதப்படுகிறது. பொங்கல் தினத்துக்கு முதல்நாள் கொண்டாடப்படும் பண்டிகை போகிப்பண்டிகை எனப்படும். அதாவது மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படும் பண்டிகை இது.பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்து வர்ணம் தீட்டுவது தமிழர்களின் வழக்கம்… அவ்வாறு சுத்தம் செய்யும்போது தேவையற்ற பழையப் பொருட்களை எடுத்து போகி அன்று எரிப்பார்கள்…. சுத்தத்தை வலியுறுத்தும் திரு நாள் தான் போகி…

தைப்பொங்கல்

மக்கள் நல்ல விளைச்சலுக்கு உதவிய சூரிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை மாதத்தின் முதல் நாளை தைப்பொங்கலாகக் கொண்டாடுகின்றனர்.இந்நாளன்று அதிகாலையில் எழுந்து புதிய நெல்லில் இருந்து தயார் செய்யப்பட்ட அரிசியில் சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் ஆகியவற்றை தயார் செய்து பொங்கல், செங்கரும்பு, புதுமஞ்சள், பனங்கிழங்கு, காய்கறிகள், பருப்பு வகைகள், பழவகைகள் ஆகியவற்றை சூரிய தேவனுக்கு படையலிட்டு பொங்கலோ பொங்கல் என்று மகிழ்ச்சியுடன் ஆராவாரம் செய்து வழிபாடு மேற்கொள்கின்றனர்.

மாட்டுப் பொங்கல்

உழவுத் தொழிலுக்கு உதவிய மாடுகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.அன்றைய தினம் ஜல்லிக்கட்டு, உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

காணும் பொங்கல்

தை மூன்றாம் நாள் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இன்றை தினத்தில் மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களைக் கண்டு உறவாடி மகிழ்கின்றனர்.ஒற்றுமை மற்றும் பகிர்ந்துண்ணல் போன்றவற்றை வலியுறுத்தும் விழாவாக‌ இவ்விழா அமைகிறது.

தைப்பூசம் திருவள்ளுவர் தினம் தை அமாவாசை என பால பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது.

Leave a Response