இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம்.. வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது.

bus 2

ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த நடுவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நலனை கருதி வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக வாபஸ் பெற தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளது.

அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 8-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வந்தனர்.இதுதொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அரசுத்தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், போராட்டம் நடத்திய காலத்திற்கு சம்பளம் வழங்கப்பட மாட்டது, வழக்குப்பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை உண்டு என தெரிவிக்கப்பட்டது.அரசின் இந்த முடிவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.இழுவையில் இருக்கும் 0.13 காரணி ஊதிய உயர்வு குறித்து இரு தரப்புக்கும் இடையே மத்தியஸ்தரை நியமிக்க தயார் என நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நடுவராக நியமித்து உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.
மக்கள் நலன் கருதி, நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் என்று தொழிற்சங்க வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் கூறினார்.மத்தியஸ்தர் நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம் ஊதிய உயர்வு பிரச்சனைக்கு ஒரு வழி பிறந்துள்ளதாக சி.ஐ.டி.யு கருத்து தெரிவித்துள்ளது. மேலும் நாளை முதல் தொழிலாளர்கள் பணிக்கு திரும்புவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து ஊழியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது. உறுதியாக போராடிய தொழிலாளர்களுக்கு நன்றி. ஒத்துழைத்த பொதுமக்களுக்கும் நன்றி என மார்க்சிஸ்ட் எம்.பி டி.கே ரங்கராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Response