“விஜய் பெரிய ஹீரோ ஆவதற்கு நாங்கள் தான் காரணம்”- சொன்னது யார்?

Aaram Thinai Audio launch
MRKVS சினி மீடியா சார்பாக ஆர்.முத்து கிருஷ்ணன் மற்றும் வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். கதையின் நாயகனாக மொட்ட ராஜேந்திரன். முக்கியமான கதாபாத்திரங்களில் ரவிமரியா, லாவண்யா மற்றும் விஜய் டிவி குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர்.

ராஜ் கே .சோழன் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினரை வாழ்த்த இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு, திரையரங்குகள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், நடிகர் ஆரி, கவிஞர் சினேகன், மறைந்த அப்துல் கலாம் அவர்களின் உதவியாளரான பொன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இசைத்தகட்டை இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட திரு. அபிராமி ராமநாதன் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்தி பேசிய திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் கூறியதாவது, “பேய் இருக்கா இல்லையான்னு கேட்டா இருக்குன்னுதான் சொல்வேன்.. அமானுஷ்யம்னா அது பேயா, இல்ல முனியா எதோ ஒன்னு இருக்குங்க. மனுசனால எது ஒன்றை பாக்க முடியாதோ அதை பார்க்கத்தான் ஆசைப்படுவான். இல்லைன்னா நயன்தாரா படத்துக்கு எதுக்கு இவ்வளவு கூட்டம் வருது.

பொன்ராஜ் பேசும்போது தியேட்டர்காரர்கள் கொளையடிக்கிறார்கள், அதனால் சின்ன படங்கள் சாகிறது என குற்றம் சாட்டினார். கடந்த வருடத்தில் நான் ஐம்பது படங்கள் விநியோகம் பண்ணினேன். அதுல 45 படங்கள் சின்ன படங்கள் தான். இன்றைக்கு விஜய் பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவர் முதன்முதலா நடித்தபோது அது சின்ன படம் தான். எங்களை போன்ற தியேட்டர்காரர்கள் சின்ன படம் என அதை புறக்கணித்திருந்தால் அவர் இன்று இந்த அளவிற்கு வளர்ந்திருக்க முடியுமா..?

தியேட்டர்களில் சில சின்ன படங்களுக்கு 15 பேர் கூட வர மாட்டேங்கிறாங்க.. இதுனால எங்களுக்கு ஏசி போடுற காசு கூட கிடைக்காது. அப்படின்னா அந்த படத்தை நிறுத்துறத தவிர எங்களுக்கு வேற வழியில்ல.. இதோ இப்ப அருவின்னு சின்ன படம் ஒன்னு வெளியாச்சு. ஆனால் முதல்நாள்ல இருந்து நல்ல கூட்டம்.. அந்தப்படத்துக்கு மட்டும் கூட்டம் எப்படி வந்துச்சு. மக்களுக்கு மட்டும் எப்படியோ அது தெரியுது. அந்த வித்தை மட்டும் எங்களுக்கு தெரிஞ்சிருந்தா அத்தனை சின்ன படங்களையும் ஓட வைச்சிருப்போம். அந்த சக்ஸ் பார்முலாவ கண்டுபிடியுங்க.

முதல்ல திருட்டு விசிடி பிரச்சனை இருந்துச்சு. இப்போ படம் ரிலீஸாகி 15 நாட்கள்ல அமேசான்ல படம் வந்துருது. இது லீகலா வருதுன்னாலும் குறைஞ்சது ஒரு மாதத்திற்காவது படங்களை இப்படி அமேசான்ல கொடுக்காம இருங்க. திரையரங்குகள் தான் வசூலை மொத்தமாக அள்ளிக்கொடுக்க முடியும். அமேசனால அப்படி அள்ளிக்கொடுக்க முடியாது. தியேட்டர்கள் பொன்முட்டையிடும் வாத்து. அதை நீங்கள் அழித்து விடாதீர்கள்” என சூடு கிளப்பினார் அபிராமி ராமநாதன்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக பேசிய இயக்குனர் கே.பாக்யராஜ், “பேய் இருக்கா இல்லையான்னு இப்ப வரைக்கும் எல்லோரிடமும் ஒரு கேள்வி இருந்துட்டே இருக்கு.. சின்ன வயசுல நான் கூட, இப்படி பேய் இருக்கும்னு நினைச்சு பயந்து பத்தடி தூரத்துல இருக்க என்னோட வீட்டுக்கு ஒரு பர்லாங் தூரம் சுத்திலாம் நடந்து வந்திருக்கேன். அப்புறம் போகப்போகத்தான் பேய் இல்லைன்னு எனக்கு தெளிவாச்சு.

ஒரு சிம்பிள் லாஜிக்.. இப்ப யாராலோ கொல்லப்பட்டு பேயா மாறுகிறவங்களுக்கு தங்களை கொன்னது யார்னு தெரியும். பேயா மாறிவந்ததும் அவங்களை கொன்னு பழி தீர்த்துட்டு போயிட்டா அப்புறம் காவல்துறை, நீதி மன்றம் இதுக்கெல்லாம் வேலையே இருக்காதே. அப்படி ஏன் கொல்றது இல்ல..?“ என ஒரு பகுத்தறிவு கேள்வியுடன் படக்குழுவினரை வாழ்த்தி, இசை குறுந்தகட்டை வெளியிட்டார்.

Leave a Response