வங்கிக் கணக்கு, பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு; 2018 மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு

வங்கிக் கணக்கு, பான் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசத்தை 2018 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கிக் கணக்கு, மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்தும் ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டம் 2016-ஐ எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமைதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள பின்னணியில், ஆதார் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜனவரி 17ம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் நேற்று (வியாழன்) கூறியது.

sprm-court__11526_10434_07081_15089

இந்நிலையில், ஆதார் எண் கட்டாய இணைப்பு உத்தரவுக்கு இடைக்கால தடை பிறப்பிக்கக்கோரிய மனுக்கள், உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே சிக்ரி, ஏ.எம். கன்வில்கர், டி.ஓய். சந்திரசூட் மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

பல்வேறு நலத்திட்டங்களுடன் ஆதார் எண் இணைப்பதற்கான அவகாசத்தை 2018 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய அரசு சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.

இதை இன்று ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வங்கிக் கணக்கு, பான், உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண் இணைப்பதற்கான கால அவகாசத்தை 2018 மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்க அனுமதி வழங்கினர்.

இதுபோலவே மொபைல் போனுடன் ஆதார் எண் இணைப்பதற்கு வழங்கப்பட்ட அவகாசத்தையும் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

Leave a Response