ராமர் பாலம் உண்மையா?- இணையத்தில் வைரலாகும் வீடியோ; அமெரிக்க அறிவியல் சேனல் ட்விட்டரில் வெளியிட்டது

13-1513147103-ram-setu-is-man-made-claims-promo-on-us-tv-channel-3

அமெரிக்க அறிவியல் சேனல் ட்விட்டரில் வெளியிட்டுள்ள ராமர் பாலம் உண்மைதானா? என்ற முன்னோட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலான கடற்பகுதியில் 13 மணல் தீடைகள் உள்ளன. தனுஷ்கோடியில் இருந்து முதல் 6 தீடைகள் இந்தியாவுக்கும், 7-ல் இருந்து 13 வரையிலான தீடைகள் இலங்கைக்கும் சொந்தமானவை. இந்த மணல் தீடைகள் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்களின் நம்பிக்கையோடு தொடர்புள்ளவைகளாக இருப்பதால் ராமர் பாலம், ஆதாம் பாலம் என அழைக்கப்படுகிறது. தமிழில் சேது என்றால் பாலம் என்றும் அர்த்தம்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியான ‘சயின்ஸ் சேனல்’ ட்விட்டரில் ஒரு முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் நாசா செயற்கைக் கோள் எடுத்த இந்தியா (தனுஷ்கோடி) – இலங்கை (தலைமன்னார்) இடையே மன்னார் வளைகுடா, பாக். ஜலசந்தி கடற்பகுதிக்கு நடுவே சங்கிலித் தொடர் போல் உள்ள மணல் தீடைகள் காட்டப்படுகின்றன.

map3355-13-1513147425

 

தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள கொலராடோ பல்கலைக்கழகம், இந்தியானா பல்கலைக்கழகம், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானிகள் மணல் தீடைகள் குறித்து தங்கள் கருத்துகளை முன்வைக்கிறார்கள்.

“இந்தியா – இலங்கை இடையே அமைந்துள்ள மணல் திட்டுகளில் மேற்பரப்பில் இருக்கும் பாறைகள் 7000 ஆண்டுகளுக்கு முந்தையது. மணல் திட்டுகளோ 4,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. இந்தப் பாலத்தை மந்திரப் பாலம் என இந்து புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ராமர் கட்டியதாக கூறப்பட்டுள்ளது” என அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க அறிவியல் சேனல் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. மேலும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Leave a Response