நாடாளுமன்ற குளிர்கால தொடர் நாளை துவக்கம் : இன்று அனைத்து கட்சி கூட்டம்!

 

rs-story-647_121115012231_15231

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது.   ஜனவரி 5ம் தேதி வரை மொத்தம் 14 நாட்களுக்கு இத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்துக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வழக்கமாக நவம்பர் 3வது வாரத்தில் தொடங்கி டிசம்பர் 2வது வாரம் வரை நடைபெறும். கடந்த ஆண்டு குளிர்கால கூட்டம் நவம்பர் 16ம் தேதி தொடங்கி டிசம்பர் 16ம் தேதி வரை மொத்தம் 22 வேலை நாட்கள் நடந்தது. ஆனால், இந்தாண்டு அவ்வாறு கூட்டப்படவில்லை. காரணம், குஜராத் தேர்தல் என கூறப்பட்டது. குளிர்கால கூட்டத்தை கூட்ட மத்திய அரசு தாமதப்படுத்துவதை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. ‘குளிர்கால கூட்டத்தை தாமதப்படுத்துவது ஜனநாயகத்துக்கு அவமதிப்பு. நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்வதில் இருந்து பிரதமர் தப்பித்து ஓடுகிறார். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் எழுப்பும் முக்கிய பிரச்னைகள், குஜராத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் எனபதால், குளிர்கால கூட்டத்தை மத்திய அரசு தாமதப்படுத்துகிறது’ என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.

parliment

இதற்கு மத்திய அரசு, ‘குஜராத் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், குஜராத் எம்.பி.க்கள் 37 பேர் தீவிரமாக ஈடுபடுவார்கள். இது குளிர்கால கூட்டத் தொடரில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால்தான் தாமதமாக கூட்டப்படுகிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்திலும், டிசம்பர் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்தால் இது போன்ற நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளன’ என விளக்கம் அளித்தது. குஜராத்தில் 2ம் மற்றும் இறுதிக்கட்ட சட்டப்பேரவை தேர்தல் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து,  நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் நாளை முதல் தொடங்குகிறது. ஜனவரி 5ம் தேதி வரை மொத்தம் 14 வேலை நாட்கள் இத்தொடரை நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஆலோசிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இதில் கலந்து கொள்ளும் தலைவர்களுக்கு மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் விருந்தளிக்கிறார். இந்த குளிர்கால கூட்டத் தொடரில், திவால் விதிமுறைகள் தொடர்பான இரண்டு அவசர சட்டங்களுக்கும், வனத்துறை சட்ட திருத்தத்துக்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் என தெரிகிறது. மேலும், இந்த தொடரில் பல்வேறு பிரச்னைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், இந்த தொடரில் அதிகளவில் அமளி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

parliment_9

ஆண்டுக்கு 2 முறை நடந்தாலும் ஓகே:

நாடாளுமன்றம் வழக்கமாக பட்ஜெட் (பிப்ரவரி-மே), மழைக்காலம் (ஜூலை-ஆகஸ்ட்), குளிர்காலம் (நவம்பர்-டிசம்பர்) என மூன்று கூட்டத் தொடர்களாக நடக்கும். ஆனால், ஆண்டுக்கு எத்தனை முறை நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என அரசியல் சாசன சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. அரசியல் சாசனத்தின் 85வது பிரிவில், நாடாளுமன்றத்தை தகுதியான நேரத்தில் அவ்வப்போது ஜனாதிபதி கூட்டுவார், இரு கூட்டத் தொடருக்கு இடையில் 6 மாதங்கள் வரை இடைவெளி இருக்கலாம். அதில், ஜனாதிபதி தலையிடமாட்டார் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு இரண்டு முறை நாடாளுமன்றம் நடந்தாலும் அது அரசியல் சாசனப்படி செல்லுபடியான நடைமுறை.

Leave a Response