குமரி மீனவர்களுக்கு ஆறுதல் கூற கன்னியாகுமரி வருகிறார் ராகுல்

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிடவும், பெரும்துயரத்தில் இருக்கும் மீனவர்களுக்கு ஆறுதல் கூறவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார்.

வங்கக்கடல் பகுதியில் உருவான ‘ஒகி’ புயல் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. அந்த நேரத்தில் ஏகப்பட்ட மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதில் சிக்கி பலர் உயிரிழந்தனர். மேலும் ஒகி புயல் நேரத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் கன்னியாகுமரி மாவட்டமே சோகத்தில் மூழ்கியுள்ளது. கடலுக்கு சென்ற அப்பாவை காணாமலும், அண்ணன், தம்பி திரும்பி வராத காரணத்தினாலும் ஏகப்பட்ட குடும்பங்கள் கண்ணீருடம் தவித்து வருகின்றன. புயல் ஓய்ந்து 10 நாட்கள் தாண்டியும் மீனவர்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே எப்படியாவது விரைந்து மீனவர்களை மீட்டுக்கொடுங்கள் என அவர்களது உறவினர்கள், மத்திய மாநில அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

xrahul-gandhi-34-13-1513131045.jpg.pagespeed.ic.7p7j8WG3yL

இந்நிலையில் ஒகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகத்திற்கு வருகிறார். டெல்லியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ராகுல் காந்தி, கேரளாவில் மீனவர்களை சந்திக்க இருக்கிறார். அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி வரும் அவர், மீனவ கிராம மக்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வான பின் முதன்முறையாக தமிழகம் வருகிறார். ராகுல் காந்தி வருகையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Response