உயிரிழந்த இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு நேரில் சென்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆறுதல்: கதறி அழுத குடும்பத்தினர்

 

 

download 1

ராஜஸ்தானில் கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி வீட்டிற்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது அவரது குடும்பத்தினர் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

சென்னை கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை சம்பந்தப்பட்ட இரண்டுபேரை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில் ஒரு மாத தேடுதல் வேட்டையில் கொள்ளையர்கள் தினேஷ், சௌத்ரி பாலி மாவட்டம் ஜெய்த்ரான் காவல் எல்லையில் ராம்புர்கலான் என்ற கிராமத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, முனிசேகர் குழுவினர் அங்கு சென்றனர். கொள்ளையர்களை பிடிக்க கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் தோளில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார்.

inspector

தமிழக இன்ஸ்பெக்டர் ஒருவர் வெளி மாநிலத்தில் துப்பாக்கிச் சண்டையில் உயிரிழப்பது இதுவே முதன்முறை என்பதால் இந்த நிகழ்வு தமிழகம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி ஆவடியில் வசித்து வந்தார். அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகன் லயோலா கல்லூரியிலும், இரண்டாவது மகன் 8-ம் வகுப்பும் படிக்கின்றனர்.

பெரியபாண்டி உயிரிழந்த தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பெரியபாண்டி இல்லத்திற்குச் சென்றார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். கதறி அழுத அவரது குடும்பத்தினரை தேற்றினார். அவரது மகன்களை அருகில் அழைத்து ஆறுதல் கூறினார். அவர்களது குடும்பத்தாருக்கு காவல்துறை கட்டாயம் உறுதுணையாக இருக்கும். வேண்டிய உதவிகளை கட்டாயம் செய்வோம். தயங்காமல் எந்த உதவி என்றாலும் தன்னை தொடர்பு கொள்ளுமாறு ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

Leave a Response