தமிழகத்தை உலுக்கிய உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக் கொலை வழக்கு.. இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு

sankar_dalit_killed3x2_0

 சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட ஒரே காரணத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

திருப்பூர் அருகே உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர். பொறியியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யாவை சங்கர் காதலித்து வந்தார். சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 

இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சங்கரும் கவுசல்யாவும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையினர் மூலம் இருவரையும் கொல்ல திட்டமிட்டனர். கடந்த ஆண்டு மார்ச் 13-ந் தேதி உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கவுசல்யாவின் பெற்றோர் ஏவிவிட்ட கொலைகார கும்பல் சங்கர்- கவுசல்யாவை பட்டப்பகலில் வெட்டி சாய்த்தது.

Tamil_News_large_1478764

இதில் சங்கர் உயிருக்குப் போராடி உயிரிழந்தார். பலத்த வெட்டு காயங்களுடன் கவுசல்யா உயிர் பிழைத்தார். தமிழகத்தையே இந்த ஆணவப் படுகொலை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இவ்வழக்கில் கவுசல்யாவின் பெற்றோர், தாய்மாமன் மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் இவர்கள் அனைவர் மீதும் குண்டர் சட்டமும் பாய்ந்தது.

இதனை விசாரித்து வரும் திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜ் இன்னும் சிறிது நேரத்தில் தீர்ப்பு அளிக்க இருக்கிறார்.

Leave a Response