நாங்கள் அ.தி.மு.கவுக்கு அடிமையில்லை: கொந்தளிக்கும் தமிமுன் அன்சாரி

மனிதநேய ஜனநாயக கட்சி கடந்தச் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க-வின் ஆதரவோடு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. இக்கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை அ.தி.மு.க-வுடன் மிக நெருக்கமாகவே இருந்து வந்தார். அதன் பிறகு சசிகலா-ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் வெடித்தபோது, முதலில் நடுநிலை வகிப்பதாக அறிவித்த தமிமுன் அன்சாரி, தொகுதி மக்களிடம் கருத்து கேட்டு அதற்கேற்ப முடிவெடுப்பேன் என தெரிவித்து, சசிகலா அணிக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கினார். சசிகலா சிறைக்கு சென்றபின் தினகரனோடு இணக்கமாக இருந்து வருகிறார் தமிமுன் அன்சாரி.

ac2ed8b9693006aa6365a2ed4be27021

இந்நிலையில்தான் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க அமைச்சர்கள் சிலர் தமிமுன் அன்சாரிக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள். இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதால், அ.தி.மு.க-விற்கு எதிராக ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்தால், தக்க ஆதாரங்களோடு நடவடிக்கை எடுத்து எம்.எல்.ஏ பதவியை பறிப்போம் என அ.தி.மு.க அமைச்சர்கள் தமிமுன் அன்சாரியை எச்சரித்தாக சொல்லப்படுகிறது. இதனால் தான் ‘நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றாலும், நாங்கள் அ.தி.மு.க-விற்கு அடிமை இல்லை. எங்கள் கட்சிக்கு என தனி கொள்கை உள்ளது என தற்பொழுது கொந்தளிக்கிறார்.

Leave a Response