17 பாதிரியார்கள், சுப உதயகுமார் உட்பட 14,500 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு: குமரியில் மறியலில் ஈடுபட்டோர் மீது கைது நடவடிக்கை

குமரி மாவட்டத்தில் மீனவர்கள் நடத்தி வரும் மறியல் உட்பட தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட 17 பாதிரியார்கள், சுப உதயகுமார் உட்பட 14,500 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் வன்முறையைத் தூண்டியதாக 7 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ரயில் மறியல் போன்ற போராட்டத்தைக் கொண்டு கைது செய்வதற்கான வீடியோ ஆதாரத்தை போலீஸார் திரட்டி வருகின்றனர்.

ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை விரைந்து கண்டுபிடிக்க வலியுறுத்தியும், மீனவர்களுக்கு நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும் குமரி மாவட்டத்தில் மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

x07-1512635176-fishermen-protest76131.jpg.pagespeed.ic.yhJSj6_K2b

போராட்டத்தின் முதல் நாளான கடந்த 7ம் தேதி நடந்த ரயில் மறியல் போராட்டம் நள்ளிரவு வரை நடந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. அன்று கன்னியாகுமரிக்கு ஆளுநர் வந்த நிலையில், இந்தப் போராட்டத்தால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் கன்னியாகுமரி எக்ஸ்பிரசில் சென்னை திரும்பிச் செல்ல முடியாமல் ஆளுநரின் பயணத் திட்டம் மதுரை வழியாக மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் திருவனந்தபுரம் மார்க்கத்தில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இதுதவிர குளச்சல், கடியப்பட்டிணம், மணவாளக்குறிச்சி, தேங்காய்பட்டினம், கன்னியாகுமரி என பல கடற்கரை கிராமங்களில் நடந்த தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மற்றும் போராட்டத்தைத் தூண்டியவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளனர். இதில் முதல்கட்டமாக 14,500 பேருக்கு மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

x07-1512635200-fishermen-protest3445.jpg.pagespeed.ic.QxxicrZJTB

இப்போராட்டத்தை முன்னின்று நடத்தியதாக பச்சை தமிழகம் அமைப்பாளர் சுப உதயகுமார், குமரி கடலோடிகள் இயக்கச் செயலாளர் சஜிம்சன், பாதிரியார்கள் கென்னடி, ஜஸ்டஸ், டார்வின், செல்வன், அன்பரசு, சாம் மேத்யூ, செல்வராஜ், கிறிஸ்துராஜ், கிறிஸ்டின், பொனிப்பாஸ் லூசியான், அருள்சீலன் உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் மீனவர்கள் போராட்டத்தைத் தூண்டி வன்முறையில் ஈடுபட சதிசெய்ததாக 7 பேரை போலீஸார் கைது செய்தனர். திருநெல்வேலியை சேர்ந்த அன்பு, கோவில்பட்டியைச் சேர்ந்த கணேசன், மாரிமுத்து, ஆதி, பாளையங்கோட்டையைச் சேர்ந்த சிம்சன், சென்னையைச் சேர்ந்த மருது, கடையநல்லூரைச் சேர்ந்த முகம்மது ஆனஸ் ஆகிய 7 பேரை கொல்லங்கோட்டில் வைத்து போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

07-1512664955-fishermen-protest21814

மேலும் குழித்துறை ரயில் நிலையத்தில் நடந்த மறியல் போராட்டத்தில் போலீஸார் எடுத்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் அடுத்தகட்டமாக கைது நடவடிக்கைக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

போராட்டக் குழுவினர், மற்றும் பாதிரியார்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருவது குறித்து அறிந்ததும் குமரி கடற்கரை கிராமங்களில் பங்கு தந்தையர் மற்றும் பாதிரியார்கள் ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து தெற்காசிய மீனவத் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் கூறுகையில்; மீனவர்களின் போராட்டத்தை அச்சுறுத்தி முடக்கும் வகையில் போலீஸார் கைது நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். குழித்துறையில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தின்போது வாகனங்களில் செல்ல அனுமதிக்காமல் போலீஸார் தடுத்ததால் தான் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் நடந்து வந்து மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்துவிட்டு, தற்போது மீனவ மக்களை ஏமாற்றும் வகையில் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். எத்தனை அடக்குமுறை வந்தாலும் எங்கள் போராட்டம் தொடரும் என்றார்.

உளவுத்துறை மூலம் கைது பட்டியல் தயாரிப்பு!

குமரி மாவட்டத்தில் மீனவர்கள் போராட்டம் நீடித்து வரும் நிலையில் போராட்டத்தைத் தூண்டியவர்கள் மற்றும் மெரினா, நெடுவாசல் போராட்டம் பாணியில் மீனவர்கள் போராட்டத்தை வழிநடத்திச் சென்றவர்கள் குறித்த பட்டியலை சட்டம் ஒழுங்கு போலீஸார் மற்றும் ரயில்வே போலீஸாருடன் இணைந்து உளவுத் துறையினர் பட்டியல் தயார் செய்து வருகின்றனர். இவர்களை ஜனவரி மாதத்திற்குள் கைது செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் மீனவர்கள் தரப்பில் பரபரப்பு நிலவி வருகிறது.

Leave a Response