மும்பையில் தப்பிய தஷ்வந்த் சிக்கியது எப்படி? காட்டிக்கொடுத்த ‘கைவிலங்கு’

09-1512805898-tasvanth2443

‘மும்பையில், போலீஸாரிடமிருந்து தஷ்வந்த் தப்பியபோது, அவருடைய கையில் விலங்கு மாட்டப்பட்டிருந்தது. அதனால்தான் மீண்டும் தஷ்வந்த் எங்களிடம் சிக்கினார். அவரை இன்று சென்னைக்கு அழைத்துவர உள்ளோம்’ என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குன்றத்தூரைச் சேர்ந்த சேகரின் மகன் தஷ்வந்த், பொறியியல் பட்டதாரி. இவர்மீது ஏற்கெனவே சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலைசெய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், கடந்த 2-ம் தேதி பெற்ற தாயையே கொலை செய்ததாக அவரை குன்றத்தூர் போலீஸார் தேடிவந்தனர். மும்பையில் தலைமறைவாக இருந்த தஷ்வந்த், போலீஸிடம் சிக்கினார். மும்பையிலிருந்து சென்னைக்கு அவரை அழைத்துவர போலீஸார் தயாராக இருந்தபோது, இன்ஸ்பெக்டர் சார்லஸைத் தள்ளிவிட்டுவிட்டு தஷ்வந்த் தப்பினார்.

09-1512805890-tashvanth44515
இதையடுத்து, மும்பை போலீஸாரும் தஷ்வந்த் மீது வழக்குப்பதிவு செய்தனர். மும்பை போலீஸாரும், தமிழக போலீஸாரும் தஷ்வந்த்தை தேடிய நிலையில், மும்பை அந்தேரி பகுதியில் உள்ள உணவகத்தில் அவர் தலைமறைவாக இருந்த தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. அங்கு சென்ற போலீஸார், தஷ்வந்த்தை மீண்டும் கைதுசெய்தனர். மும்பையிலிருந்து சென்னைக்கு அவரை அழைத்துவர உள்ளனர்.

 

தஷ்வந்த் போலீஸாரிடம் சிக்கியது எப்படி என்று தனிப்படை போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “மும்பையில் எங்களிடம் அவர் சிக்கியதும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். நீதிமன்ற உத்தரவின்பேரில் சென்னைக்கு அழைத்து வர ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். சென்னைக்குப் புறப்படுவதற்கு முன்பு, விமான நிலையப் பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிடச் சென்றோம். அப்போது, தஷ்வந்த்தின் கைகளில் விலங்கு மாட்டப்பட்டிருந்தால், அவரால் சாப்பிட முடியவில்லை. அதனால், வலதுகையில் உள்ள கைவிலங்கை அகற்றினோம். இன்ஸ்பெக்டர் சார்லஸ் அருகில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த தஷ்வந்த், திடீரென சேரோடு அவரைத் தள்ளிவிட்டார். இதில் சார்லஸ் நிலைதடுமாறினார். அருகில் இருந்த மற்ற போலீஸார் சுதாரிப்பதற்குள் அங்கிருந்து ஓட்டம்பிடித்தார். நாங்களும் அவரை விரட்டிச்சென்றோம். ஆனால், உணவகத்தின் வெளியில் இருந்த மக்கள் கூட்டத்துக்குள் தஷ்வந்த் புகுந்துவிட்டார். இதனால், அவரைக் கண்டறிவதில் சிக்கல் எழுந்தது. அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுமூலம், தஷ்வந்த் எந்தத் திசையில் சென்றார் என்பதை மும்பை போலீஸார் உதவியுடன் கண்டறிந்தோம்.
அப்போது, விமான நிலையப் பகுதியிலிருந்து 5 கி.மீட்டர் தூரத்தில் உள்ள அந்தேரி பகுதிக்கு தஷ்வந்த் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது. மும்பையில் அந்தேரிப் பகுதி, தமிழர்கள் வாழும் இடம். இதனால், தமிழர்களின் உதவியை நாடி தஷ்வந்த் அங்கு சென்றிருக்க வேண்டும் என்று கருதினோம். இதனால், அந்தேரிப் பகுதியில் சல்லடைபோட்டு தஷ்வந்த்தைத் தேடினோம். அப்போது, மும்பை விலேபார்லே போலீஸாருக்கு ஒரு போன் அழைப்புவந்தது. அதில் பேசியவர், கைவிலங்குடன் ஒருவர் இருக்கும் தகவலைத் தெரிவித்துள்ளார்.

09-1512805910-tasvanth-accused-hasini-murder4412


 

இதையடுத்து, போலீஸார் டீமுடன் அங்கு சென்றோம். எங்களைப் பார்த்ததும் அங்கிருந்து ஓட முயன்றார். அவரை மடக்கிப்பிடித்து, கைதுசெய்துள்ளோம். தஷ்வந்த்தை சென்னைக்கு பாதுகாப்புடன் அழைத்துவர திட்டமிட்டுள்ளோம்” என்றனர்.

 

“தவறான பழக்கத்தால் என்னுடைய வாழ்க்கை திசைமாறிவிட்டது. படிக்கும்போது சில நண்பர்கள் என்னை தவறான பாதைக்கு அழைத்துச்சென்றனர். அதிலிருந்து மீளமுடியவில்லை. திருந்த வேண்டும் என்று பலமுறை முயற்சிசெய்தேன். ஆனால், தவறுக்கு மேல் தவறு நடந்துவிட்டது. ஹாசினி கொலை வழக்குக்குப் பிறகு குடும்பத்தில் ஆயிரத்தெட்டு பிரச்னை. நிம்மதியில்லாமல் தவித்தேன். இந்தச் சமயத்தில்தான் எனக்கும் அம்மாவுக்கும் தகராறு நடந்தது. ஆத்திரத்தில் அடித்துவிட்டேன். அவர் மயங்கி விழுந்தததும் வீட்டைவிட்டு ஓடிவந்தேன். அப்போதுதான் சிறையில் பழகிய ஒருவர்மூலம் மும்பை வந்தேன். கொண்டுவந்த பணம், நகை ஆகியவற்றை வைத்து சந்தோஷமாக வாழ்ந்தேன். ஆனால், நான் இருக்கும் இடத்தை போலீஸார் கண்டறிந்து, கைதுசெய்துவிட்டனர். கைவிலங்கு போட்டு என்னை போலீஸார் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சாப்பிடுவதற்காக கைவிலங்கை அகற்றியபோது, அங்கிருந்து தப்பி ஓடினேன். கையில் பணமில்லாததால், 5 கி.மீட்டர் தூரம் நடந்தே சென்றேன். கைவிலங்கை மறைத்தபடி அங்கு சென்றேன். ஒருவேளை சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் தவித்தேன். அன்றைய இரவு தூங்க இடமில்லாமல், விடியவிடிய விழித்திருந்தேன். தப்பிச்செல்ல வழியில்லை. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்குள் போலீஸார் மீண்டும் பிடித்துவிட்டனர்” என்று தஷ்வந்த் போலீஸாரிடம் கூறியதாக, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், தஷ்வந்த் கடுமையான மனஇறுக்கத்தில் இருக்கிறார். சென்னை வந்த பிறகு, தஷ்வந்த்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று முடிவுசெய்துள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.

Leave a Response