குழித்துறை ரயில் நிலைய தண்டவாளத்தில் அமர்ந்து மீனவ குடும்பத்தினர் மறியல்

903c45ce0deb201b31e493bad87d9e2d

ஒக்கிப் புயல் காரணமாக கடலில் மாயமான மீனவர்களை பத்திரமாக மீட்க வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மீனவ குடும்பத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.

 

மீனவக் குடும்பத்தினர் ரயில் மறியலில் ஈடுபடும் குழித்துறை ரயில் நிலையத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ரயில் மறியலில் ஈடுபட மீனவ குடும்பத்தினர் ஆயிரக்கணக்கானோர் குழித்துறை நோக்கி பேரணியாக வந்ததால், இன்று காலை முதலே பல பகுதிகளில் போக்குவரத்து முடக்கப்பட்டது.

 

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னமும் மீட்கப்படாத நிலையில், வெறும் 86 மீனவர்கள் மட்டுமே மீட்கப்படவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுவது உண்மைக்கு மாறானது என்றும் மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடலில் தத்தளித்து வரும் மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

 

குழித்துறையில் ரயில் மறியலில் ஈடுபடுவதற்காக, சுமார் 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் என ஆயிரக்கணக்கானோர் இரு பிரிவாக பேரணியாக வந்தனர். கன்னியாகுமரியின் தலச்சன்விளை பகுதியில் இருந்து ஒரு பிரிவினரும், இஞ்சிவிளை பகுதியில் இருந்து மற்றொரு பிரிவினரும் பேரணியாக வந்துள்ளனர்.

 

b2cd5c39ec54a0237c36b539f08a7d6b

இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீட்கப்படவில்லை என்று கூறி மீனவ கிராமத்தினர் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். காணாமல் போன மீனவர்கள் அனைவரையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

குழித்துறை ரயில் நிலையத்தில் மீனவ கிராம மக்கள் ஏராளமானோர் தண்டவாளங்களில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி வருகின்றனர். கைகளில் கறுப்புக் கொடி வைத்திருக்கும் ஏராளமான இளைஞர்களும், பெண்களும் தண்டவாளத்தில் அமர்ந்துள்ளனர்.

 

தற்போது எந்த மீனவ கிராமத்தை விட்டு யாரும், இரு சக்கர வாகனம் உட்பட எதிலும் வெளியே செல்ல முடியாதவாறு மீனவர் கிராமங்களை,முக்கிய சாலைகளை, காவல்துறையினர் முற்றுகையிட்டுள்ளனர். மீறிசெல்பவர்கள் கைது செய்யப்படுகின்றனர். எந்த ஊடகமும் மீனவர் கிராமத்திறகுள் செல்ல அனுமதிக்கப் படவில்லை.

Leave a Response