‘ஆட்சியே நடக்கவில்லை என்று ஆளுநர் நினைத்துவிட்டாரோ?’ – சாடும் மு.க.ஸ்டாலின்!

34823bffbc2239e067d6dfbde39b4f53

‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க மிகப் பெரிய வெற்றி பெறும் நிலை உருவாகியுள்ளதால் தேர்தலை நிறுத்த சதி நடக்க வாய்ப்புள்ளது’ என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு மேற்கொண்டு வருவதுகுறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஸ்டாலின் ‘தமிழகத்தின் முதல்வர், அமைச்சர் போல ஆளுநர் கோவையில் ஆய்வுமேற்கொண்டார். தற்போது நெல்லையிலும் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இது சட்டத்துக்குப் புறம்பானது. மாவட்டவாரியாக மக்கள் பணி மேற்கொள்ளும் அதிகாரம், உரிமை ஆளுநருக்கு இல்லை. ஆனால், இதைப்பற்றி எல்லாம் தற்போது தமிழகத்தை ஆளும் குதிரைபேர ஆட்சி கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால் இது அடிமை ஆட்சி. தமிழகத்தில் தற்போது ஆட்சியே நடைபெறவில்லை என்று ஆளுநர் நினைத்ததால்தான் என்னவோ அவர் அந்தப் பணிகளை மேற்கொண்டுவருகிறார்’ என்றார்.
கன்னியாகுமரியில் ஒகி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்கள் விவகாரம்குறித்து பேசிய ஸ்டாலின், ‘மீனவர்கள் காணாமல் போன சம்பவம் கடந்த 29-ம் தேதி நடந்திருக்கிறது. இன்று தேதி 7 ஆகிவிட்டது. 10 நாள்கள் ஆகியும் இதுவரை காணாமல் போன மீனவர்கள் குறித்து கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. மீன்வளத்துறை அமைச்சர் ஒரு கணக்கு சொல்கிறார். தலைமைச் செயலாளர் ஒரு கணக்கு சொல்கிறார். மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஒரு கணக்கு சொல்கிறார். ஆனால், ஒருவரும் சரியாக எத்தனை மீனவர்கள் காணாமல் போனார்கள், மீட்கப்பட்டவர்கள் எண்ணிக்கை என்ன என்பதைக் கூறவில்லை’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Response