ஹாசினி கொலையாளி தஷ்வந்த் மும்பையில் பிடிபட்ட பின்னணி!

a1d3d3aa-be33-47a1-8249-6e480a60e9de

சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த ஹாசினி என்னும் 7 வயது சிறுமி கடந்த பிப்ரவரி மாதம் பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொல்லப்பட்டார். அவரது உடல் முற்றிலும் கருகிய நிலையில் சென்னை அனகாப்புத்தூர் அருகே கண்டெடுக்கப்பட்டது. அதிர்ச்சியூட்டும் விதமாக ஹாசினியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான தஷ்வந்த்தான் அந்தக் கொலையைச் செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டார், வழக்கில் கைதாகி சிறையில் இருந்த குற்றவாளி தஷ்வந்தின் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், அண்மையில் அவர் ஜாமீனில் வெளிவந்தார். அதன் பிறகு தஷ்வந்த் குன்றத்தூரில் தனது அம்மா அப்பாவுடன் வசித்துவந்தார். ஆனால், கடந்த சனிக்கிழமை (2/12/2017) அன்று தஷ்வந்தின் தாய் சரளா தனது வீட்டில் கழுத்தறுபட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். முதலில் நகை திருடவந்தவர்கள் அப்படிச் செய்திருக்கலாம் என்று கூறப்பட்டது. பிறகு குற்றம் நடந்த இடத்திலிருந்து தஷ்வந்த் மாயமானதை அடுத்து விசாரணை தஷ்வந்தின் பக்கம் திரும்பியது. சரளாவைக் கொன்றது தஷ்வந்த்தான் என்று போலீஸ் தரப்பினர் கூறினார்கள். ஏற்கெனவே ஹாசினி வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்துகொண்டிருந்த சூழலில் தஷ்வந்த் தரப்பு வழக்கறிஞர் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் அதனால் அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரிக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்தநிலையில்தான் தஷ்வந்தின் தாய் சரளாவும் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, தஷ்வந்தின் தந்தை குன்றத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் குற்றவாளியைத் தேடும் பணி தொடங்கியது.

16684199_1015449435122

போலீஸ் தஷ்வந்தை பிடித்த பின்னணி!

இந்நிலையில், தஷ்வந்தை குன்றத்தூர் போலீஸார் இன்று மும்பையில் தற்போது கைது செய்துள்ளார்கள். இதுகுறித்து அம்பத்தூர் சரகத் துணை ஆணையர் சர்வேஷ் ராஜ் கூறுகையில், “தஷ்வந்த் தேடப்பட்டு வந்த நிலையில் அவன் மும்பை செல்ல இருப்பதாக எங்களுக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, குன்றத்தூர் காவல்துறை ஆய்வாளர் சார்லஸ் தலைமையிலான குழு மும்பை விரைந்தது. ஏற்கெனவே ஹாசினி விவகாரத்தில் தஷ்வந்தை நாங்கள் விசாரித்து இருந்ததால் அவனது சில பழக்க வழக்கங்களை நாங்கள் நன்கு அறிவோம். அந்தப் பழக்கத்தின் அடிப்படையில் அவன் மும்பையில் எங்கெல்லாம் செல்ல வாய்ப்பிருக்கிறது என்று ஊகித்து அந்த இடங்களில் தேடினோம். அதன்படி மும்பையில் எங்களது தேடுதல் வேட்டையைத் தொடங்கினோம். இதையடுத்து, மத்திய மும்பையில் உள்ள தார்டியோ என்னும் இடத்தில் அவனை தற்போது பிடித்துள்ளோம். நாளை முதல் இந்த வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணை தொடங்கும்” என்ற சர்வேஷ் தஷ்வந்தின் அந்த மர்மமான பழக்கவழக்கம் பற்றி கூற மறுத்துவிட்டார்.

Leave a Response