‘சன் பிக்சர்ஸ்’ அடுத்த படத்தில் விஜய்! சர்ச்சையை கிளப்பும் ‘தளபதி’ பட்டம்!

thalapathyjpg

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரிக்கிற புதிய திரைப்படத்தில் விஜய் நடிக்கிறார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான விளம்பரத்தில், ‘தளபதி’ என்ற அடைமொழியுடன் விஜயின் பெயர் இடம்பெற்றுள்ளது.

ஏற்கெனவே, விஜய் ‘தளபதி’ என்ற பட்டத்தைப் பயன்படுத்த திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், திமுக குடும்பத்தைச் சேர்ந்த மாறன் சகோதரர்களின் தொலைக்காட்சியே விஜயின் அந்தப்பட்டத்தை அங்கீகரிப்பது போல, விளம்பரத்தை வெளியிட ஒப்புக் கொண்டது விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

விஜய் ரசிகர்கள் அதை வரவேற்கிறார்கள். திமுகவினர் கடுமையாகச் சாடுகிறார்கள். “எங்கள் தளபதி ஸ்டாலினுக்கு எதிராக உள்ளரசியல் செய்துவரும் சன் டிவி, இந்தப் படத்தின் மூலம் அதைப் பகிரங்கப்படுத்தியிருக்கிறது” என்பது ஸ்டாலின் தரப்பினரின் வாதம்.

விஜய் ரசிகர்களோ, “அண்ணனின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் திமுகவினர் பொருமுகிறார்கள். பெரியாரோடு இருந்தபோது, அண்ணாவுக்குப் பயன்படுத்திய தளபதி பட்டத்தை, ஸ்டாலின் பயன்படுத்தவில்லையா? எங்கள் விஜய் பயன்படுத்திய ‘இளைய தளபதி’ பட்டத்தைப் போட்டு உதயநிதி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டவில்லையா?” என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

p28a

இரு தரப்பையும் சேராத எழுத்தாளர் சரவணன் சந்திரன் இவ்வாறு எதிர்வினையாற்றியிருக்கிறார்.

“இது மிக மிகத் தவறான முன்னுதாரணம். சன் தொலைக்காட்சியும் இதை இப்படி உறுதிப்படுத்தக் கூடாது. தமிழக அரசியல் துறையில் நீண்ட காலமாக தளபதியென அவர் சார்ந்தவர்களால் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பல வருடங்களாக அடையாளப்படுத்தப்படுகிறார். வீம்பிற்காக இப்படி தளபதியென போட்டுக் கொள்வது சரியில்லை என்றே தோன்றுகிறது. ‘தளபதி’ என்கிற பட்டத்திற்குப் பதில் ‘கலைஞர்’ என்றோ ‘புரட்சித் தலைவர்’ என்றோ போட்டால் அப்படியே இதுமாதிரி கல்வெட்டில் பொறிப்பார்களா? பட்டத்தில் என்ன இருக்கிறது என சாதாரணமாகக் கடந்து விட முடியாது. ஏனெனில் தமிழக அரசியலையும் பட்டங்களையும் சரியோ தவறோ, பிரிக்க முடியாது!”

Leave a Response