ஓகி புயலால் உயிரிழந்த மீனவருக்கு இழப்பீடு கோரி வழக்கு : மத்திய மாநில அரசுகளுக்கு கோர்ட் நோட்டீஸ்

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு 25 லட்ச ரூபாய் இழப்பீடு தரக்கோரிய வழக்கில் டிசம்பர் 20ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டு உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓகி புயல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த புயலால் குமரி மாவட்டத்தில் உள்ள சாலைகள், மரங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. மின்கம்பங்கள் சேதமடைந்து இருப்பதால் மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.

 fishermen-ockhi-05-1512473392

முற்றிலுமாக பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதே சமயம், குமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் ஓகி புயலால் இன்னும் வீடு திரும்பவில்லை. மீனவர்களின் படகுகள் கடுமையாக சேதமடைந்த நிலையில், பலர் கடலில் உயிரிழந்து உள்ளதாகவும்,இன்னும் பல மீனவர்கள் கடலோர பகுதிகளில் தஞ்சமடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் கடந்த சில நாட்களாக, மீனவ கிராமங்களில் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். தொடர்ந்து கடலில் தேடுதல் பணி நடந்து வருவதாக சொல்லப்பட்டாலும், இன்னும் எத்தனை மீனவர்கள் காணாமல் போய் இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் அரசிடம் முழுமையாக இல்லை.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த ராஜன் என்பவர் இறந்துபோன மீனவர்களுக்கு தலா 25 லட்சமும், காயமடைந்த மீனவர்களுக்கு 10 லட்ச ரூபாயும் இழப்பீடு வழங்கக் கோரியும், ஓகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரியும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் வேணுகோபால், தாரணி அமர்வு மீனவர்களுக்கு இழப்பீடு அளிக்கும் விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் டிசம்பர் 20ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

Leave a Response