தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை; தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி தமிழகம் மற்றும் ஆந்திரம் நோக்கி நகரும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம், மண்டல புயல் எச்சரிக்கை மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறும்போது, இந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்றார்.

 

”டிசம்பர் 6-ம் தேதி வாக்கில் (புதன்கிழமை), இது வடமேற்கு திசையில் வடதமிழகம், தெற்கு ஆந்திரக் கடற்கரைகளை நோக்கி நகர வாய்ப்புள்ளது” என்றார்.

 

இதனால் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

திங்களன்று காலை 8.30 மணியளவில் முடிந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் ஆங்காங்கே மழை பதிவாகியுள்ளன.

rain

தேனி மாவட்டம் அரண்மனைப்புதூரில் அதிகபட்சமாக 6 செமீ மழை பதிவாகியுள்ளது.

இதற்கிடையே ஒக்கி புயல் இன்று காலை 5.30 மணி நிலவரப்படி கிழக்கு மத்திய அரபிக் கடலில் அம்னிதிவிக்கு 590 கிமீ வட வடமேற்காகவும், மும்பைக்கு தென் தென்மேற்காகவும் சூரத்துக்கு 870 கிமீ தென் தென்மேற்காகவும் மையம் கொண்டுள்ளது.

நாளை, டிசம்பர் 5-ம் தேதி இது மெதுவாக பலவீனமடைந்து தெற்கு குஜராத் மற்றும் வடக்கு மகாராஷ்டிரம் இடையே நள்ளிரவில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Response