ரகு விபத்து எதிரொலி: கோவையில் உள்ள அனைத்து பேனர்களையும் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!

 

kovai-1

கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்ட அலங்கார வளைவில் மோதி மென் பொறியாளர் ரகு உயிரிழந்தது குறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொடர்ந்த வழக்கில், மாவட்டத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட அனைத்து பேனர்களையும் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுமதி பெற்ற பேனர்களாக இருந்தாலும், அவை விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி இருந்தால், அவற்றையும் அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அமெரிக்காவில் பணியாற்றி வந்த மென்பொறியாளர் ரகுபதி கடந்த வாரம் திருமணத்துக்காக பெண் பார்க்க கோவை வந்தார். இரவு பழனி கோயில் செல்ல அவிநாசி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவில் மோதி கீழே விழுந்ததால் அருகில் வந்த லாரி மோதியதில் உயிரிழந்தார்.

 

இது குறித்து சிங்காநல்லூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவரது மனுவில்:

“கடந்த வாரம் ரகு என்ற இளைஞர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவில் மோதி உயிரிழந்தார், ரகுபதியின் மரணத்திற்கு காரணம் அலங்கார விழா வளைவுதான் அதற்கு அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்த ரகுவின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

download 2

இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன்

“அனுமதி எதுவும் வழங்கப்படாமல், முறையான அனுமதி வழங்காமல் பேனர் வைத்துள்ளனர். ஏற்கனவே நீதிமன்ற உத்தரவு விழா நடக்கும் இரண்டு நாட்களுக்கு முன்னர் மட்டுமே வைக்கப்பட வேண்டும் என்பதை மீறி ஒரு வாரம் முன்பே வைக்கப்பட்டுள்ளது. எந்த விதிகளையும் அரசு பின்பற்றவில்லை இதன் காரணமாக ரகுவின் மரணம் நடந்துள்ளது. இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

 

இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் 258 பேனர்கள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஆவணத்தை தாக்கல் செய்தார். அதை படித்த நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். “இதில் நாங்கள் திருப்தி அடையவில்லை. அவினாசி சாலை முழுதும் என்று உள்ளது. எந்த இடத்தில் வைப்பது என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை, அதிகாரிகள் கண்மூடித்தனமாக செயல்பட்டுள்ளனர், மேலும் ஆட்சியர் பரிந்துரை மட்டுமே செய்துள்ளார். அனுமதி எங்கே அளிக்கப்பட்டுள்ளது” என்று கேள்வி எழுப்பினர்.

 

“இந்த சூழ்நிலையை பார்த்தால் ரகுவின் மரணம் சந்தேகத்துக்குரியதாக தோன்றுகிறது” என்று தெரிவித்தனர்.

அதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர் “ரகு எதிர் திசையில் வந்த லாரி மோதியதால் தான் மரணமடைந்தார்” என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த நீதிபதிகள், “ரகுவின் மரணம் இழப்பீடு குறித்து நாங்கள் வழக்கை விசாரிக்கவில்லை ஆனால் அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்”

மேலும் “உடனடியாக கோவையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து பேனர்களையும் அகற்ற வேண்டும், அனுமதி அளித்திருந்தாலும், ஏற்கனவே உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மீறி வைக்கப்பட்டிருந்தாலும் அகற்ற வேண்டும். சாலை வளைவில், பள்ளிகளுக்கு அருகில், போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்ட பேனர்களையும் உடனடியாக அகற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Response