கன்னியாகுமரிக்கு தெற்கே ‘ஒகி’ புயல்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று (நவம்பர் 30) காலை 8.30 மணியளவில் மேலும் வலுப்பெற்று புயலாக உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன், “வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று (நவம்பர் 30) காலை 8.30 மணியளவில் மேலும் வலுப்பெற்று புயலாக உருவானது. இதற்கு ‘ஒகி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் புயல் தற்போது கன்னியாகுமரிக்கு தெற்கே சுமார் 60 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக மணிக்கு சுமார் 65 கி.மீ., முதல் 75 கி.மீ., வரை பலத்த காற்று வீசும்.

அடுத்த 24 மணி நேரத்தைப் பொருத்தவரை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெயும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. தஞ்சாவூர், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறரார்கள்.

இந்தப் புயலானது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து லட்சத்தீவுகளை நோக்கிப் பயணிக்கும்” என்றார்.

கடந்த 24 மணி நேரத்தில் தக்கலையில் அதிகபட்சமாக 7 செ.மீ., மழை பெய்துள்ளது.

Leave a Response