டி.எம்.எஸ்., வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு…!

60980c698d688e4dd771712887be4927

செவிலியர்கள் பலர் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்து ஒன்று சேர்ந்து சென்னையில் தேனாம்பேட்டை பகுதியில் உள்ள டைரக்ட்ரேட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் டி.எம்.எஸ்., வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடந்து வருவதால், பலரும் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தைக் கலைக்கவும் கைவிடச் செய்யவும் பல்வேறு உத்திகளை மாநில அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பேச்சு வார்த்தை நடத்தியது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் சுமுக முடிவு கிட்டவில்லை. பின்னர் பணி நீக்கம் செய்யப்படுவர் என மிரட்டியது அரசு. ஆனால், போராட்டம் தொடரவே, செவிலியர்கள் போராட்டம் நடந்து வரும் சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு மருத்துவத் தேர்வு வாரியம்  மூலம் நியமிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த இரு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர் செவிலியர்கள். சுமார் 11 ஆயிரம் செவிலியர்கள் இவ்வாறு பணியில் அமர்த்தப் பட்டனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,700 மட்டுமே தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒப்பந்தப் பணியில் அமர்த்தப் பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும், காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு மருத்துவத் தேர்வு வாரிய செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இத்தகைய பின்னணியில், செவிலியர்கள் சுமார் இரண்டாயிரம் பேர், பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து, தேனாம்பேட்டை அண்ணாசாலையில் உள்ள டிஎம்.எஸ் வளாகத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் அப்புறப் படுத்தினர். பின்னர் அவர்கள்  டி.எம்.எஸ் வளாகத்துக்குள் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கடந்த இரு தினங்களாக இந்தப்  போராட்டம் வலுவடைந்ததால், பிரச்னை உருவெடுத்தது.

 

ஆனால், சுகாதாரத் துறையோ, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. பணி நீக்கம் செய்யப் படுவர் என்ற மிரட்டல் தொடர்ந்தது. இதனால் பயந்து போன சிலர் நேற்று இரவு போராட்டத்தை வாபஸ் பெற்று திரும்பினர். ஆனால், பெரும்பாலானவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.  இதனிடையே, அரசியல் ரீதியாக, அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு குவிந்தது. திமுக., செயல் தலைவர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் போராட்டம் நடந்து வரும் டி.எம்.எஸ் வளாகத்தில்  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், அந்த வளாகத்தில் பணியாற்றுபவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள் தவிர, மற்றவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற  உத்தரவிடப் பட்டது. இந்த உத்தரவின்படி, நர்சுகளின் வழக்கறிஞர்கள், உறவினர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், என பலரும் அந்த வளாகத்தினை விட்டு வெளியேறு விடுமாறு அறிவுறுத்தப் பட்டது. செவிலியர்களுக்கு ஆதரவு தெரிவித்து யாரேனும் வந்தால், அவர்களை தடுத்து வெளியேற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, செய்தியை சேகரிக்க வந்த பத்திரிகையாளர்கள், ஊடகத்தினரையும் உள்ளே விடாமல் போலீஸார் தடுத்தனர். இதனால் அவர்கள் டிஎம்.எஸ் வளாகத்தில் வெளியிலேயே அமர்ந்தனர்.

Leave a Response