நாக்பூர் டெஸ்டில் இந்தியா அபார இன்னிங்ஸ் வெற்றி: 239 ரன் வித்தியாசத்தில் இலங்கையை சாய்த்தது!

201711271322492017_2_ashwin._L_styvpf

நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

இந்தியா – இலங்கை இடையிலான 2-வது டெஸ்ட் நாக்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 205 ரன்னில் சுருண்டது. அஸ்வின் 4 விக்கெட்டும், ஜடேஜா மற்றும் இசாந்த் சர்மா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் ஆடிய இந்தியா முதல் இன்னிங்கில் 610 ரன்கள் குவித்து, மூன்றாம் நாளான நேற்று டிக்ளேர் செய்தது. கேப்டன் கோலி 213 ரன்கள் விளாசினார். முரளி விஜய் 128 ரன்களும், புஜாரா 143 ரன்களும், ரோகித் சர்மா 102 ரன்களும் (அவுட் இல்லை) எடுத்தனர். இதன்மூலம் இந்தியா 405 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் சேர்த்திருந்தது.

இந்நிலையில் இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கருணாரத்னே 18 ரன்களிலும், திரிமன்னே 23 ரன்களிலும், மேத்யூஸ் 10 ரன்களிலும், டிக்வெல்லா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 75 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

அதன்பின்னர் கேப்டன் சண்டிமல் நிதானமாக ஆடி, விக்கெட்டை காப்பாற்ற போராடினார். ஆனால், மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. சனகா (17), பெரேரா (0), ஹெராத் (0) ஆகியோரை அஸ்வின் வெளியேற்றினார். இதனால், இலங்கை அணி தோல்வியை நோக்கி பயணித்தது.

இந்த போராட்டத்திற்கு மத்தியிலும் பொறுப்புடன் ஆடிய சண்டிமல் அரை சதம் கடந்தார். தொடர்ந்து ஆடிய அவர் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் காமேஜ் (0) ஆட்டமிழக்க, இலங்கை அணி 166 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

aswin_test_13260

அஸ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஜடேஜா, உமேஷ் யாதவ், இசாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

Leave a Response