உணவகங்களின் உரிமம் ரத்துசெய்யப்படும்! அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

9207b53d0fcd86753490bd0ee6343631

ஜி.எஸ்.டி வரிக்குறைப்பின் பயனை மக்கள் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ஜி.எஸ்.டி கவுன்சில் உறுப்பினரும், தமிழக மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

 

சுதந்திரத்துக்குப் பிறகான நாட்டின் மிகப்பெரிய வரிச் சீர்திருத்தமாகக் கருதப்படும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) விதிப்பு முறை கடந்த ஜூலை ஒன்றாம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதில், குளிர்சாதன வசதிகொண்ட உணவகங்களுக்கு 18 சதவிகித வரியும், அந்த வசதி இல்லாத உணவகங்களுக்கு 12 சதவிகித வரியும் விதிக்கப்பட்டன. பின்னர், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, உணவகங்களுக்கான வரி 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது. ஆனால், இந்த வரிக்குறைப்பின் பயனை மக்களுக்கு அளிக்காமல், உணவுப் பொருள்களின் விலையை உணவகங்கள் அதிகரித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஜி.எஸ்.டி வரிக் குறைப்பைக் கண்காணிக்க அதிகாரிகள் குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

 

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘ஜி.எஸ்.டி வரிக்குறைப்பின் பலன் மக்களுக்குக் கிடைக்கும்வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் கண்காணிப்புக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடம்பெறுவர். விலைக்குறைப்புகுறித்து உணவகச் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரியைக் குறைத்தும் விலையைக் குறைக்காத உணவகங்கள்மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது. அந்த உணவகங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்’ என்றார்.

Leave a Response