முந்தைய ரெய்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?: ஸ்டாலின் கேள்வி!

MK STALIN
ஜெயலலிதா இல்லத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனை பற்றிய கேள்விக்கு, இதற்கு முன்னர் நடந்த ரெய்டுகளில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனபது பற்றி பதில் வரட்டும் அதன் பிறகு போயஸ் தோட்டத்தில் நடந்த ரெய்டு பற்றி பதிலளிக்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

 

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர் கேட்ட கேள்வியும் அவர் பதிலும்:

ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்திலேயே ரெய்டு நடந்துள்ளது இது பற்றி உங்கள் கருத்து?

நான் ஏற்கனவே பல முறை கூறியுள்ளேன். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தலைமைசெயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் அலுவலகத்தில் நடந்த சோதனை என்ன ஆயிற்று, என்ன நடவடிக்கை எடுத்தார்கள். குட்கா புகழ் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் வீட்டில் நடந்த சோதனை, 89 கோடி ரூபாய் ஆவணங்கள் எடுக்கப்பட்டது அதில் எடப்பாடி பெயர் உள்ளது, பல அமைச்சர்கள் பெயர் உள்ளது அதில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்.

 

அதன் பின்னர் டிஜிபி உட்பட பல அமைச்சர்கள் உட்பட குட்காவில் மாமுல் வாங்கியதாக இதே வருமான வரித்துறை ரெய்டு நடந்தது, நத்தம் விஸ்வநாதன் வீட்டில் ரெய்டு நடந்தது, அன்பு நாதன் வீட்டில் நடந்த ரெய்டு, மணல் மாஃபியா சேகர் ரெட்டி வீட்டில் எதற்காக நடந்தது என்பது பற்றி பதிலில்லை. இது போன்ற ரெய்டுகளில் ரெய்டு நடந்த பின் என்ன நடந்தது?, என்ன கண்டு பிடித்துள்ளார்கள்?, என்ன வழக்கு போட்டுள்ளார்கள்? இதைப்பற்றியெல்லாம் விளக்கம் வரட்டும் நான் பதில் சொல்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Response