6 மணி நேரத்தில் 508 கி.மீ கடந்த ஆம்புலன்ஸ்! – ‘கேரளாவில் ஒரு நாள்’

f108bd4a2d8f9b155f0c79c5d9abad02

கேரளாவில், பிறந்து 31 நாள் ஆன குழந்தையின் இருதய அறுவைசிகிச்சைக்காக, கண்ணூரிலிருந்து திருவனந்தபுரம் வரை 508 கிலோ மீட்டரை 6 மணி நேரம் 45 நிமிடங்களில் கடந்துள்ளார், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தமீம்.
கேரள மாநிலம் கண்ணூர் மருத்துவக் கல்லூரியில், ஃபாத்திமா லைபா என்ற குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது.

 

அந்தக் குழந்தைக்கு, இருதயத்தில் அறுவைசிகிச்சை செய்யவேண்டிய நிலை. அடுத்த நாள், திருவனந்தபுரத்தில் இருக்கும் சித்திரைத் திருநாள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.

 
நம்பிக்கையுடன், புதன்கிழமை இரவு 8.23 -க்கு இரண்டு போலீஸ் வாகனத்துடன் புறப்பட்டது ஆம்புலன்ஸ் . ஆம்புலன்ஸை ஓட்டுநர் தமீம் என்பவர் ஓட்டினார். குழந்தையைக் காப்பாற்ற அந்த ஓட்டுநர் மட்டுமல்ல, காவல்துறை, பொதுமக்கள், சமூக ஊடக நண்பர்கள் என அனைவரும் உதவிசெய்துள்ளனர். ஆம்புலன்ஸ் செல்லும் பாதையை எளிதில் கடக்க, காவல்துறை ஏற்பாடுசெய்திருந்தது.

 

 
சமூக ஊடகத்திலும் ஆம்புலன்ஸ் செல்லும் பாதையை மக்களுக்குத் தெரியப்படுத்திக்கொண்டு இருந்தனர். வாகனத்தில் இருக்கும் ஜி.பி.எஸ் உதவியுடன் ஆம்புலன்ஸ் வரும் பாதையைப் பொதுமக்களும் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தினர். அதன்மூலம், மக்கள் அந்த வழியில் செல்வதைத் தவிர்த்தனர். சாதாரண நேரத்தில் இந்த தூரத்தை கடக்க 10 மணி நேரத்துக்கும் மேல் ஆகும். ஆனால், காவல்துறை மற்றும் பொதுமக்களின் உதவியால் 6 மணி நேரம் 45 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் திருவனந்தபுரத்தை அடைந்துள்ளது.

 

 
உடனடியாக சித்திரைத் திருநாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, அந்தக் குழந்தை கவலைக்கிடமான நிலையில் இருந்தாலும், அனைவரும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஒரு சமூகமே குழந்தையைக் காப்பாற்ற போராடியுள்ளதே.
தமிழில், ‘சென்னையில் ஒரு நாள்’ திரைப்படம் இதே போன்ற கதையம்சம் கொண்டது. இது, மலையாளத்தில் வெளியான ‘ட்ராஃபிக்’ என்ற படத்தின் ரீமேக்தான். இந்தப் படமும் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Response