வரும் டிசம்பர் 15 க்குள் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் முழுமையாக வழங்கப்படும்! அமைச்சர் அறிவிப்பு!

smart
வரும் டிச. 15-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தற்போது 23 லட்சம் குடும்ப அட்டைகளில், முகவரி, புகைப்பட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் நிறைவடைந்து, ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் முழுமையாக வழங்கப்பட்டு விடும்.

இதன்பிறகும், திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அட்டைகள் தொடர்ந்து அளிக்கப்படும். ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்படாவிட்டாலும், நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

பருப்புகள் விநியோகம்: நியாய விலைக் கடைகளில் மசூர் பருப்பு (துவரம் பருப்பின் ஒருவகை), துவரம் பருப்பு, கனடியன் லெண்டில் ஆகிய 3 பருப்புகளும் இருப்பைப் பொருத்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படுகின்றன. இப்பருப்புகள் முந்தைய காலத்தில் இருந்தே பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் அதிக விளைச்சல் மற்றும் உடனடியாகக் கிடைக்கும் பருப்பை கொள்முதல் செய்கிறோம்.

இந்த மூன்று பருப்புகளிலும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. மசூர் பருப்பு உடலுக்கு நல்லதல்ல என்று கூறப்படும் தகவலும் தவறானது. அது உடலுக்கு கேடு விளைவிக்காது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளனர்.

உளுத்தம் பருப்பு இல்லை: நியாய விலைக் கடைகளில் உளுத்தம் பருப்புக் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. 2008-ஆம் ஆண்டில் இருந்து துவரம் பருப்பு அல்லது கனடியன் லெண்டில் பருப்பை 13 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்து கொண்டிருந்தோம். அதே நேரத்தில் 7 மெட்ரிக் டன் உளுத்தம் பருப்பையும் வாங்கிக் கொண்டிருந்தோம்.

இவற்றில், துவரம் பருப்பு பலருக்கும் உளுத்தம் பருப்பு சிலருக்கும் கிடைத்து வந்தது. ஆனால் ஒவ்வோர் அட்டைக்கும் ஒரு கிலோ பருப்பு கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக 21 ஆயிரம் மெட்ரிக் டன் மசூர் பருப்பு அல்லது துவரம் பருப்பு அல்லது கனடியன் லெண்டில் பருப்பை கொள்முதல் செய்கிறோம். அந்த வகையில் இவற்றில் ஏதாவது ஒன்று, குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. உளுத்தம் பருப்பைக் கொடுப்பதாக அரசு சொல்லவில்லை.

Leave a Response