காணாமல் போன மதச்சார்பின்மை கொள்கை: கோயிலுக்கு சென்றுவிட்டு பிரச்சாரத்தை தொடங்கிய ராகுல்!

RAHULGANDHIjpg

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 9 மற்றும் 14 தேதிகளில் நடைபெறுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் அம்மாநிலத்துக்கு படையெடுத்து வருகின்றனர். காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று முதல் மூன்று நாட்கள் வடக்கு குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 6 மாவட்டங்களில் அவர் பிரச்சாரம் செய்கிறார். ஹர்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி, ராகுல் காந்தி என பலமுனை நெருக்கடியை பாஜக இத்தேர்தலில் சந்திக்க நேர்ந்துள்ளது. அதனால், பாஜகவும் விறுவிறுப்பாக பிரச்சாரம் செய்துவருகிறது.

இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை வடக்கு குஜராத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கவிருந்த ராகுல் காந்தி முதலில் அக்‌ஷர்தம் கோயிலுக்குச் சென்று வணங்கிவிட்டு பின்னர் பிரச்சாரத்துக்கு கிளம்பினார். அக்‌ஷர்தம் கோயிலுக்கு படேல் சமூகத்தினர் பெருமளவில் வழிபடுவது வழக்கம். இந்நிலையில், படேல் சமூகத்தினரின் வாக்குகளை குறிவைத்தே ராகுல் காந்தி, அக்‌ஷர்தம் கோயிலுக்குச் சென்றார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

‘ஓட்டுக்களுக்காக கோயில் செல்லும் ராகுல்’:

அதேபோல் பாஜகவும் ராகுல் காந்தி மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளது. “தேர்தலில் இந்துக்கள் வாக்குகளைப் பெறவே ராகுல் காந்தி, இப்போது மட்டும் கோயில்களுக்குச் செல்கிறார். இதற்கு முன்னர் பலமுறை ராகுல் காந்தி குஜராத் வந்திருக்கிறார். ஆனால், அப்போதெல்லாம் அவர் கோயிலுக்கு செல்லவில்லை. ஓட்டுகளுக்காக அவர் செய்யும் வேலைகளை மக்கள் நன்கு அறிவர். அவரது கேலிக்கூத்துகள் வாக்குகளைப் பெற்றுத்தராது. காங்கிரஸ் கட்சியினர் போலி மதச்சார்பின்மை அடையாளத்தை துறந்துவிட்டு. இந்துத்துவ கொள்கைகளை மதிக்க கற்றுக்கொள்ளட்டும்” என குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் கூறியுள்ளார்.

காங்கிரஸ் பதிலடி:

பாஜகவின் இந்த குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சியும் பதிலடி கொடுத்துள்ளது. பக்திக்கு காப்புரிமை பெறமுடியுமா? யார் வேண்டுமானாலும் கோயிலுக்கு செல்லலாம். கடவுளை வணங்கலாம். ஆனால், ராகுல் கோயிலுக்கு செல்வதைமட்டும் ஏன் எதிர்க்க வேண்டும்? கோயிலுக்கு செல்வதை கண்டிக்கும் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவர். இந்துக் கோயில்களுக்கு மட்டுமல்ல, ராகுல் காந்தி இதற்கு முன்னதாக ஜெயின் கோயில்களுக்கும் குருதுவாராக்களுக்கும்கூட சென்றிருக்கிறார்” என, குஜராத் காங்கிரஸ் தலைவர் சக்திஷின் கோஹில் கூறியிருக்கிறார்.

இன்று மாலை ராகுல் காந்தி, பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள அம்பாஜி கோயிலுக்கு செல்கிறார்.

Leave a Response