டெல்லியில் பள்ளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அறிவிப்பு!

xfog44-08-1510137421.jpg.pagespeed.ic._mJSm9Ct9P

டெல்லியில் கடும் காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு நவம்பர் 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை அன்று பள்ளிகள் திறக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளில் உள்ள காற்று மாசு கண்காணிப்பு மையங்களில் காற்று தரக் குறியீடு (ஏக்யூஐ) கடுமையாக அதிகரித்து (448) காணப்படுகிறது. இதன் காரணமாக டெல்லியில் 200 மீட்டருக்கு அப்பால் உள்ள எதையும் பார்க்க முடியாமல் பனிமூட்டம் போல காட்சி அளிக்கிறது.

இதனால் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மட்டுமின்றி பஞ்சாப், ஹரியாணா, வடக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளில் 25 மீட்டருக்கு அப்பால் உள்ள எதையும் பார்க்க முடியாத நிலை உள்ளது. இதனால் பள்ளிகளுக்கு இன்று ஏற்கெனவே விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதன்படி, காற்று மாசு காரணமாக குழந்தைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் பள்ளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அளிக்க முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து துணை முதல்வரும், கல்வியமைச்சருமான மணீஷ் சிசோடியா கூறியதாவது:

”டெல்லியில் இதுவரை இல்லாத அளவு காற்று மாசு ஏற்பட்டுள்ளது. காற்று தரக் குறியீடு (ஏக்யூஐ) 484 உள்ளது. இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தைகளின் உடல் நிலையில் சமரசம் செய்ய முடியாது. இதனால் அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளுக்கும் நவம்பர் 12-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. திங்கட்கிழமை அன்று பள்ளிகள் திறக்கப்படும்.

எனினும் நிலைமையை கூர்ந்து கண்காணித்து வருகிறோம். நவம்பர் 12-ம் தேதி மீண்டும் ஆலோசனை நடத்தி பள்ளிகள் தொடர்பாக முடிவெடுக்கப்படும். காற்று மாசு தொடர்பாக அண்டை மாநிலங்களான ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகளுடன் பேசியுள்ளோம்” என மணீஷ் சிசோடியா கூறினார்.

 

Leave a Response