ஆட்சியர் அலுவலகத்தில் போலீஸ் சோதனைக்கு பிறகே மக்கள் அனுமதி!

nellai1

கடந்த திங்கட்கிழமை நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் நடந்தது. அப்போது அங்கு வந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து, அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் ஆகியோர் கந்துவட்டி தொல்லையால் தீக்குளித்து இறந்தனர். இது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்தால் கந்து வட்டிக்காரர்கள் மீது போலீசார் தொடர்ந்து வழக்கு பதிந்து வருகின்றனர். இதனிடையை ராமையன்பட்டியை சேர்ந்த பஸ் டிரைவரும் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் தீக்குளிக்க முயன்றார்.

nellai

இந்தத் தொடர் சம்பவங்களால் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அனைத்து வாயில்களும் பேரிகார்டு கொண்டும், இரும்பு கதவுகள் கொண்டும் மூடப்பட்டு காவலுக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் நடந்ததால் மனு கொடுக்க பொது மக்கள் திரண்டனர். இதை எதிர்பார்த்து காத்திருந்த போலீசார் அவர்களை கடுமையான சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

டூவிலரில் வந்தவர்களின் பேனட், சைட் பாக்ஸ், கையில் வைத்திருந்த கவர் உள்ளிட்ட அனைத்தும் திறந்து பார்க்கப்பட்டது. ஆண், பெண்களிடம் காவலர்கள் கடுமையான சோதனை நடத்திய பின்னரே கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். பீடி, சிகரெட், தீப்பெட்டி வைத்திருந்தால் அதனையும் பறிமுதல் செய்தனர்.

police

கூட்டமாக மனு கொடுக்க வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி ஒருவரை மட்டுமே அனுமதித்தனர். இந்த முறை எச்சரிக்கையாக தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியவை ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே நிறுத்தப்பட்டிருந்தது.

இந்தச் சோதனைகளுக்கு ஆட்சியர் அலுவலக ஊழியர்களும் தப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கெடுபிடியால் பலர் மனு கொடுக்க முடியாமல் திரும்பிச் சென்றனர்.

Leave a Response