கிரானைட் கொள்ளைக்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் துணை போகிறார்கள்?… அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு??

Anbumani-Ramadoss

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்த மதுரை மாவட்ட கிரானைட் கொள்ளை தொடர்பாக  சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இது கிரானைட் கொள்ளையர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த அமைச்சர்கள், அதிகாரிகளைக் காப்பாற்றும் முயற்சியாகும். தமிழக அரசின் இந்த தவறான நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.
கிரானைட் ஊழல் குறித்து விசாரணை நடத்திய இ.ஆ.ப. அதிகாரி சகாயம், இது குறித்து சி.பி.ஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு இவ்வாறு கூறியிருக்கிறது. அதுமட்டுமின்றி, கிரானைட் ஊழலால் அரசுக்கு ரூ.1.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுவதை ஏற்க முடியாது என்றும், அரசு  கூறியிருக்கிறது. மதுரை மாவட்டத்தில் கிரானைட் கொள்ளையால் ஏற்பட்ட இழப்பின் மதிப்பு இன்னும் கூடுதலாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், அது பற்றி விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிப்பது தான் அரசின் கடமையாகும். ஆனால், கிரானைட் கொள்ளையால் அதிக இழப்பு ஏற்படவில்லை என்பதும், சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்பதும் குற்றவாளிகளைக் காப்பாற்றும் செயலாகவே தோன்றுகிறது.

kiranat
கிரானைட் கொள்ளையை மிகப்பெரிய அளவில் நடத்தியது அதிமுக-திமுக மேலிடங்களின் ஆதரவு பெற்ற நிறுவனங்கள் தான். கிரானைட் கொள்ளைக்காக மேலூர் வட்டத்தின் பூகோள அமைப்பே மாற்றப்பட்டுள்ளது. தொல்லியல் முக்கியத்துவம் கொண்ட சமணர் படுக்கை அமைந்த மலைகள் சிதைக்கப்பட்டுள்ளன; ஏராளமான நீர்நிலைகள் கிரானைட் கற்களை பதுக்கி வைக்கும் சுரங்கங்களாக மாற்றப்பட்டன; ஆறுகள் திசை மாற்றி விடப்பட்டுள்ளன. இயற்கைக்கு இவ்வளவு கேடுகளை செய்தவர்களை ஒருபோதும் தப்பிக்கவிடக் கூடாது.
ஆனால், தமிழக அரசின் செயல்பாடுகள் தவறு செய்தவர்களை தண்டிக்கும் நோக்கம் கொண்டவையாக  இல்லை. மதுரை மாவட்டத்தில் கிரானைட் கொள்ளை 1989&ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஆனால், கிரானைட் கொள்ளை மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை தமிழகத்தை மாறி, மாறி ஆட்சி செய்து வரும் இரு திராவிடக் கட்சிகளுக்கும் கிரானைட் கொள்ளையர்கள் வழங்கி வந்ததால் அவர்கள் மீது ஆட்சியாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2011&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு  நிதி பெறுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலால் உருவான பகை காரணமாகவே, அத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த அதிமுக அரசு, மதுரையைச் சேர்ந்த புகழ்பெற்ற கிரானைட் நிறுவனம் மீது நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டது. ஆனால், காலப்போக்கில் அந்த நிறுவனத்துடன் பேரம் பேசப்பட்டு, பெற வேண்டியவை  பெறப்பட்டு விட்டதால், இப்போது அந்நிறுவனத்தை காப்பாற்ற அதிமுக அரசு துடித்துக் கொண்டிருக்கிறது.

sakayam
கிரானைட் கொள்ளை குறித்து சகாயம் குழு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டு, பல மாதங்களாகியும் அதற்கு அரசு அனுமதி அளிக்காதது, சகாயம் குழு விசாரணையை தொடங்கிய பிறகும் அதற்கு தொடர்ந்து முட்டுக்கட்டைகளை போட்டது, கிரானைட் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சகாயம் குழு பரிந்துரைத்தும் அதை ஏற்க மறுப்பது என கிரானைட் கொள்ளையர்களைக் காப்பாற்ற தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

Anbumani-Ramadoss1
அதுமட்டுமின்றி, கிரானைட் ஊழல் தொடர்பான வழக்குகளில் கிரானைட் நிறுவன அதிபர்களை மேலூர் நீதிபதி முறைகேடாக விடுதலை செய்த நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்து அவ்வழக்குகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் உச்சக்கட்டமாகவே இப்போது கிரானைட் கொள்ளை குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று அரசு கூறியுள்ளது. இயற்கை வளங்களைக் காக்க வேண்டிய அரசு, அதன் கொள்ளையர்களைக் காப்பது வெட்கக்கேடானது.

Leave a Response