ப்ளூவேல் விளையாட்டை பற்றி தொலைகாட்சிகளில் ஒளிபரப்ப உச்சநீதிமன்றம் உத்தரவு!

blu
கடந்த சில மாதங்களாக ப்ளூவேல் என்னும் தற்கொலைக்குத் தூண்டும் விளையாட்டில் ஈடுபட்டு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பலியாகி இருக்கிறார்கள். 50 நாட்களுக்குள் குறிப்பிட்ட டாஸ்க்குகளை செய்து முடிக்க வேண்டும் என்பதே இந்த விளையாட்டின் விதி. இறுதியில் தற்கொலைக்குத் தூண்டும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த விளையாட்டு உலகம் முழுவதிலும் பிரபலமாகி வருகிறது.

சமீபகாலமாக இந்தியாவில் இந்த விளையாட்டு பரவி வருகிறது. தனிமையின் பிடியிலும், சாகச உணர்விலும் இருக்கும் இளைஞர்கள் இந்த விளையாட்டிற்கு எளிதில் அடிமையாகி விடுகிறார்கள். பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இந்த விளையாட்டால், இந்தியாவிலும் இதுவரை 100க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகி இருக்கின்றன.

எனவே இந்த விளையாட்டை இந்தியாவில் தடைசெய்யவேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர்
ஒருவர் (என்.எஸ்.பொன்னையா) உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள், இந்த விளையாட்டின் ஆபத்துகளை கருத்தில் கொண்டு, இதன் தீமைகளைச் சித்தரித்து தனியார் மற்றும் அரசு தொலைக்காட்சி நிறுவனங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்க வேண்டும் என்றும், இது குறித்து ஆய்வு செய்ய தனிக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் மத்தியரசுக்கு உத்தரவிட்டது.

மேலும், இதுகுறித்த அறிக்கையை மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Response