‘நிபந்தனையற்ற நீண்டகால சிறை விடுப்பு, அதுவே நியாயமானதாக இருக்கும்’! – மருத்துவர் ராமதாஸ்

 

‘கடந்த இரு மாதங்களாக சிறை விடுப்பில் உள்ள பேரறிவாளன், சிறைக் கட்டுப்பாடுகளைச் சிறிதும் மீறவில்லை’ என்று தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ‘வழக்குகளில் இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை பேரறிவாளனுக்கு நிபந்தனையற்ற  நீண்டகால சிறை விடுப்பில் விடுவிப்பதுதான் முறையாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜீவ் கொலை வழக்கில் தவறு செய்யாமல் தண்டிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள சாதாரணமான சிறை விடுப்பு, ஓரிரு நாள்களில் நிறைவடையவுள்ள நிலையில், அவரது சிறை விடுப்பை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று அவரது தாயார் கோரிக்கை விடுத்திருக்கிறார். பேரறிவாளனுக்கு சிறை விடுப்பு வழங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாத நிலையில், இந்தக் கோரிக்கை நியாயமானதே!

RAMADOSS_

பேரறிவாளனின் தாய், தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூத்த குடிமக்களான அவர்களுக்கு கடைசிக் காலத்தில் உதவவும், உடனிருப்பதற்காகவும்தான் அவருக்கு சிறை விடுப்பு வழங்கப்பட்டது. பேரறிவாளனின் சிறை விடுப்புக் காலத்தில், அவரது தந்தைக்கு சிகிச்சை தொடங்கப்பட்டு, சிறிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. எனினும், பேரறிவாளனின் தந்தைக்கு இன்னும் நீண்ட காலம் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தந்தையின் சிகிச்சையைத் தொடரவும், அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகளில் முன்னேற்றம் ஏற்படுவதற்கும் பேரறிவாளன் உடனிருப்பது, உளவியல் அடிப்படையில் பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அது மட்டுமன்றி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையை எதிர்த்து, முந்தைய காங்கிரஸ் அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கு மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இவ்வழக்கின் விசாரணையை காலம் தாழ்த்துவது மத்திய அரசுதான். தமிழர்கள் விடுதலையாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த வழக்கின் விசாரணை தாமதப்படுத்தப்படுகிறது.

எந்த அடிப்படையிலும் தண்டிக்கப்பட தகுதியற்ற ஒருவரை, 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைத்து வைப்பது மிகப்பெரிய மனித உரிமை மீறல் ஆகும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் விடுதலைசெய்யப்படுவார்கள் என ஜெயலலிதா இருமுறை அறிவித்த நிலையில், அதற்குச் செயல்வடிவம் கொடுப்பதற்கான நடவடிக்கைகளில் அ.தி.மு.க அரசு ஈடுபட வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாத சூழலில், பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலை தொடர்பான வழக்குகளில் இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை அவர்களை நிபந்தனையற்ற நீண்டகால சிறை விடுப்பில் விடுவிப்பதுதான் முறையாக இருக்கும்.

எனினும், பேரறிவாளனின் தாயார் இந்த வாதங்களையெல்லாம் முன்வைக்காமல், மனித நேயத்தின் அடிப்படையில் பேரறிவாளன் தந்தையார் மற்றும் சகோதரியின் மருத்துவம் தொடர்வதற்கு வசதியாக, சாதாரண சிறை விடுப்பை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கும்படி தமிழக முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த இரு மாதமாக சிறை விடுப்பில் உள்ள பேரறிவாளன், சிறைவிடுப்புக்கான கட்டுப்பாடுகளை சிறிதும் மீறவில்லை. எனவே, அவரது தாயாரின் கோரிக்கையை ஏற்று, பேரறிவாளனின் சிறை விடுப்பை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து தமிழக ஆட்சியாளர்கள் ஆணையிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Leave a Response