‘மெர்சல்’ படத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் பொன்னார்!

 

16SepDSJ01JayaGEGJEH233jpgjpg

‘அரசின் வரி விதிப்புகள் பற்றி திரைப்படங்களில் தவறான கருத்துகளைப் பரப்பக்கூடாது’ என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
தீபாவளி அன்று வெளியான ’மெர்சல்’ திரைப்படத்தில், ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றம் சாட்டினார். ” ‘மெர்சல்’ படத்தில் இருந்து ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்காவிட்டால், வழக்குத் தொடரப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

தமிழிசையைத் தொடர்ந்து, பொன்.ராதாகிருஷ்ணனும் ‘மெர்சல்’ படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்,  ’பிற நாட்டில் எப்படி வரி விதித்துள்ளார்கள் என்பது பற்றிப் பேசவேண்டிய அவசியமில்லை. நம் நாட்டின் சூழல் வேறு. பிற நாட்டின் சூழல் வேறு. நடிகர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்றால், நேரடியாக வரட்டும். அதை விட்டுவிட்டு, திரைப்படங்களில் தவறான அரசியல் கருத்துகளைப் பரப்பக்கூடாது.

’சோ’-வும் அரசியல் தொடர்பான திரைப்படங்கள் எடுத்திருக்கிறார். அவை, ரசிக்கும்படி இருக்கும். அவர் விமர்சிக்கும் அரசியல்வாதிகளே அந்த விமர்சனங்களை ரசிப்பார்கள். அவரின் விமர்சனங்களில் நகைச்சுவை கலந்து ரசிக்கும்படி இருக்கும்.

தவறான கண்ணோட்டத்தில் விமர்சிக்கக்கூடாது. வரி விதிப்புகள் பற்றி உண்மைக்கு மாறாக உள்ள வசனங்களைத் திரைப்படத்தில் இருந்து சம்பந்தப்பட்டவர்கள் நீக்க வேண்டும்’ என்று எச்சரித்துள்ளார்.

Leave a Response